உலகக்கோப்பை கிரிக்கெட்; இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகள் நாளை மோதல்!
|50 ஓவர் உலகக்கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
கொல்கத்தா,
இந்தியாவில் நடைபெற்று வரும் 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதுவரை நடந்து முடிந்த லீக் ஆட்டங்களின் முடிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளன.
மீதமுள்ள ஒரு அரையிறுதி இடத்திற்கு முன்னேற நியூசிலாந்து, பாகிஸ்தான் , ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே போட்டி நிலவுகிறது. இதில் நியூசிலாந்து அணிக்கு அதிக வாய்ப்பு உள்ளது. ஏனெனில் 9 ஆட்டங்களில் ஆடி 10 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் நியூசிலாந்து 4வது இடத்தில் உள்ளது. அந்த அணியின் நெட் ரன் ரேட்டும் (+0.743) நல்ல நிலையில் உள்ளது.
இந்நிலையில் நாளை உலகக்கோப்பை தொடரில் 2 லீக் ஆட்டங்கள் நடைபெற உள்ளன. இதில் காலை 10.30 மணிக்கு நடைபெறும் முதலாவது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி வங்காளதேசத்தை எதிர்கொள்கிறது. அதன்பின் மதியம் 2.30 மணிக்கு நடைபெறும் மிக முக்கியமான ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் மோத உள்ளன.
இந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி மிகப்பெரிய வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதிக்கு செல்ல முடியும் என்ற இக்கட்டான சூழலில் விளையாட உள்ளது. அதேவேளையில் இதில் வெற்றி பெற்றால் எந்தவித சிக்கலின்றி 2025ஆம் ஆண்டு நடைபெற உள்ள சாம்பியன்ஸ் டிராபிக்கு தகுதிபெற முடியும் என்பதால் இங்கிலாந்து அணியும் மல்லுக்கட்டும். இதனால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. மேலும் இந்த ஆட்டம் முடிந்தவுடன் இந்திய அணியுடன் அரையிறுதியில் மோதப்போகும் அணி எதுவென்று தெரியவரும் என்பதால் இது கூடுதல் எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளது.