உலகக்கோப்பை கிரிக்கெட்; காயமடைந்த ஷகிப்புக்கு பதிலாக மாற்று வீரரை அறிவித்த வங்காளதேசம்...!
|உலகக்கோப்பை தொடரில் இதுவரை இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளன.
புனே,
10 அணிகள் கலந்து கொண்டுள்ள 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை நடந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளன.
நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, இலங்கை மற்றும் வங்காளதேச அணிகள் அரையிறுதி வாய்ப்பை இழந்துள்ளன. இதில் வங்காளதேச அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் வரும் 11ஆம் தேதி ஆஸ்திரேலிய அணியுடன் மோத உள்ளது.
இந்நிலையில் காயம் காரணமாக உலகக்கோப்பை தொடரில் இருந்து வங்காளதேச அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹசன் விலகியுள்ளார். இலங்கைக்கு எதிரான ஆட்டத்தின்போது அவருக்கு இடது கை ஆள்காட்டி விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டதை அடுத்து உலகக்கோப்பை தொடரில் இருந்து விலகியுள்ளார்.
இந்நிலையில் காயம் அடைந்த ஷகிப் அல் ஹசனுக்கு பதிலாக மாற்று வீரரை வங்காளதேச கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ஷகிப்புக்கு பதிலாக அனாமுல் ஹக் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார் என்றும், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஆட்டத்தில் துணை கேப்டன் நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ அணியை வழிநடத்துவார் என்றும் அறிவித்துள்ளது.