உலகக் கோப்பை கிரிக்கெட்: ஆஸ்திரேலியா-பாகிஸ்தான் இன்று பலப்பரீட்சை
|உலகக் கோப்பை கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா- பாகிஸ்தான் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.
பெங்களூரு,
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கும் 18-வது லீக்கில் ஆஸ்திரேலிய அணி, பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.5 முறை சாம்பியனான ஆஸ்திரேலியா தனது முதல் இருஆட்டங்களில் முறையே இந்தியா, தென்ஆப்பிரிக்காவிடம் உதை வாங்கியது. முந்தைய ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி முதல் வெற்றியை பெற்றது.
ஆஸ்திரேலிய அணி பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் எழுச்சி பெற வேண்டியது அவசியமாகும். பேட்டிங்கில் ஜோஷ் இங்லிஸ், மிட்செல் மார்ஷ் தவிர வேறுயாரும் அரைசதத்தை எட்டவில்லை. வார்னர், ஸ்டீவன் சுமித், லபுஸ்சேன் ரன் எந்திரமாக மாறினால் அது அணிக்கு கைகொடுக்கும். அடுத்த சுற்று வாய்ப்பில் சிக்கலின்றி நீடிக்க இந்த வெற்றி அந்த அணிக்கு முக்கியத்துவம் பெறுகிறது.
பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி முதல் 3 ஆட்டங்களில் 2-ல் வெற்றியும் (நெதர்லாந்து, இலங்கைக்கு எதிராக) ஒன்றில் தோல்வியும் (இந்தியாவுக்கு எதிராக) கண்டுள்ளது. இந்தியாவுக்கு எதிராக 191 ரன்னில் சுருண்டு படுதோல்வி அடைந்த பாகிஸ்தான் அதில் இருந்து மீள்வதற்கான முனைப்புடன் ஆயத்தமாகிறது. இரு அணிகளும் ஏறக்குறைய சரிசம பலத்துடன் மோதுவதால் களத்தில் அனல் பறக்கும் என்று நம்பலாம்.இவ்விரு அணிகளும் இதுவரை 107 ஒருநாள் போட்டியில் நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 69-ல் ஆஸ்திரேலியாவும், 34-ல் பாகிஸ்தானும் வெற்றி பெற்று இருக்கின்றன. ஒரு ஆட்டம் 'டை' ஆனது. 3 ஆட்டம் முடிவு இல்லாமல் போனது.
பெங்களூரு சின்னசாமி ஆடுகளம் பேட்டிங்குக்கு அனுகூலமானதாகும். அத்துடன் பவுண்டரி அளவும் சிறியது என்பதால் இந்த ஆட்டத்தில் ரன் மழைக்கு பஞ்சமிருக்காது.
பிற்பகல் 2 மணிக்கு...
இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
ஆஸ்திரேலியா: மிட்செல் மார்ஷ், வார்னர், ஸ்டீவன் சுமித், லபுஸ்சேன், ஜோஷ் இங்லிஸ், மேக்ஸ்வெல், ஸ்டோனிஸ், ஸ்டார்க், கம்மின்ஸ் (கேப்டன்), ஜம்பா, ஹேசில்வுட்.
பாகிஸ்தான்: அப்துல்லா ஷபிக், இமாம் உல்-ஹக், பாபர் அசாம் (கேப்டன்), ரிஸ்வான், சாத் ஷகீல், இப்திகர் அகமது, ஷதப் கான் அல்லது உஸ்மா மிர், முகமது நவாஸ், ஹசன் அலி, அப்ரிடி, ஹாரிஸ் ரவுப்.
பிற்பகல் 2 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
'அதிக ரன்கள் குவிப்போம்'-கம்மின்ஸ்
ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் கம்மின்ஸ் நேற்று அளித்த பேட்டியில், 'பெங்களூரு போன்ற சிறிய மைதானத்தில் அதிக ரன் குவிக்க முடியும் என்று என்னால் தைரியமாக கூற முடியும். இங்குள்ள ஆடுகளம் எப்போதும் பேட்டிங்குக்கு நன்றாக இருக்கும். எனவே இந்த ஆடுகளத்தில் பேட்டிங் மிகவும் முக்கியமானதாக இருக்கும். இலங்கைக்கு எதிரான கடந்த ஆட்டத்தில் எங்களுக்கு நல்ல தொடக்கம் கிடைத்தது. மிட்செல் மார்ஷ், டேவிட் வார்னர் முதல் ஓவரில் இருந்தே அதிரடியாக ஆடினர். இதனையே எங்கள் வீரர்களிடம் இருந்து நாங்கள் விரும்புகிறோம்' என்றார்.