உலகக் கோப்பை கிரிக்கெட்: தென் ஆப்பிரிக்காவுக்கு 245 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது ஆப்கானிஸ்தான்..!
|50 ஓவர்கள் முடிவில் ஆப்கானிஸ்தான் அணி 244 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
அகமதாபாத்,
10 அணிகள் கலந்து கொண்டுள்ள 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை நடந்து முடிந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளன. இதையடுத்து மீதமுள்ள ஒரு அரையிறுதி இடத்திற்கு நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே போட்டி நிலவுகிறது. இதில் அரையிறுதிக்கு முன்னேற நியூசிலாந்துக்கு அதிக வாய்ப்பு உள்ளது.
இந்த தொடரில் அகமதாபாத்தில் இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான்-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, ஆப்கானிஸ்தான் அணி முதலில் களமிறங்கியது. தென் ஆப்பிரிக்கா அணி சிறப்பாக பந்து வீசியதால் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்தன.
தொடக்க வீரர்களாக களமிறங்கிய குர்பாஸ், இப்ராஹிம் இருவரும் முறையே 25 ரன்கள் மற்றும் 15 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். ரஹ்மத் ஷா மற்றும் நூர் அஹமது தலா 26 ரன்கள் எடுத்தனர். விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் ஓமர்சாய் பொறுப்புடன் ஆடி 97 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியில் 50 ஓவர்கள் முடிவில் ஆப்கானிஸ்தான் அணி 244 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து, 245 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா அணி பேட்டிங் செய்ய உள்ளது.