சகீப் அல் ஹசன், ஹூசைன் ஷாண்டோ அபாரம்: இலங்கையை வீழ்த்தியது வங்காள தேசம்
|பரபரப்பாக நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில், இலங்கையை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வங்காள தேச அணி வீழ்த்தி வெற்றி பெற்றது.
புதுடெல்லி,
10 அணிகள் கலந்து கொண்டுள்ள 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை நடந்து முடிந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளன. இந்த தொடரில் இன்று நடைபெற்ற 38வது லீக் ஆட்டத்தில் இலங்கை - வங்காளதேச அணிகள் மோதின.
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற வங்காளதேசம் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, இலங்கை அணியின் தொடக்க வீரர்களாக நிசாங்கா, குசல் பெரேரா ஆகியோர் களமிறங்கினர். இதில் பெரேரா 4 ரன்னில் அவுட் ஆனார். அடுத்துவந்த மெண்டிஸ் 19 ரன்னில் அவுட் ஆனார். நிதானமாக ஆடிய நிசங்கா 41 ரன்னில் அவுட் ஆனார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சமரவிக்ரமா 42 பந்துகளில் 41 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஷகீப் பந்துவீச்சில் கேட்ச் மூலம் அவுட் ஆனார்.
அடுத்த வீரராக மேத்யூஸ் களமிறங்கினார். மேத்யூஸ் களத்திற்குள் நுழைந்தபோது அவரது ஹெல்மெட்டில் ஏதோ பிரச்சினை இருந்துள்ளது. இதனால், அவர் 2 நிமிடங்களுக்கு மேல் பேட்டிங் செய்யாமல் களத்திலேயே நின்றுள்ளார். எனவே அவர் டைம் அவுட் முறையில் அவுட் ஆனார். இதன்மூலம் கிரிக்கெட் வரலாற்றில் டைம் அவுட் முறையில் அவுட் ஆன முதல் வீரரானார் மேத்யூஸ்.
அதன் பிறகு களமிறங்கிய அசலாங்கா தனது பொறுப்பான ஆட்டத்தால் சதம் விளாசினார். அவர் 105 பந்துகளில் 108 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய தனன்ஜெயா 34 ரன்களிலும், தீக்ஷனா 22 ரன்களிலும், துஷ்மந்தா 4 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதன்பிறகு களமிறங்கிய ரஜிதா, மதுஷங்கா ரன்கள் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர்.
இறுதியில் இலங்கை அணி 50 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 279 ரன்கள் குவித்தது. வங்காளதேசம் தரப்பில் தான்சிம் 3 விக்கெட்டுகளையும் ஷரிப் இஸ்லாம், சகீப் அல் ஹசன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
வெற்றி பெற 280 ரன்கள் தேவை என்ற இலக்கோடு களமிறங்கிய வங்காளதேசம் அணியில் தொடக்க ஆட்டக்காரர்களான தன்சித் ஹசன் 9 ரன்களிலும், லிட்டன் தாஸ் 23 ரன்களிலும் மதுஷனகா வீசிய பந்தில் ஆட்டமிழந்தனர். அடுத்து ஜோடி சேர்ந்த சகீப் அல் ஹசன், ஹூசைன் ஷாண்டோ ஜோடி சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ரன்ரேட்டை உயர்த்தியது.
அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரை சதத்தை பதிவு செய்து அசத்தினர். பின்னர் சதம் அடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட சகீப் அல் ஹசன் 82 ரன்களும், ஹூசைன் ஷாண்டோ 90 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய முஷிபூர் ரஹிம் 10 ரன்களும், மஹமதுல்லா 22 ரன்களும், மெஹதி ஹசன் மிர்சா 3 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
இறுதியில் ஷிருதய் 15 ரன்களும், ஹசன் ஷாகிப் 5 ரன்னும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். முடிவில் வங்காள தேச அணி 41.1 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 282 ரன்கள் எடுத்தது. இலங்கை அணியின் சார்பில் அதிகபட்சமாக மதுஷங்கா 3 விக்கெட்டுகளும், தீக்ஷனா மற்றும் மேத்யூஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
இதன்மூலம் இலங்கை அணியை 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் வங்காள தேச அணி வீழ்த்தி வெற்றி பெற்று உலகக் கோப்பை போட்டியில் தனது 2-வது வெற்றியை பதிவு செய்தது. இதன்படி உலகக் கோப்பை புள்ளிப்பட்டியலில் வங்காள தேச அணி 4 புள்ளிகளுடன் 7-வது இடத்தில் உள்ளது. இலங்கை அணி 4 புள்ளிகளுடன் 8-வது இடத்தில் உள்ளது.
இந்த முடிவுகள் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்றாலும் 2025-ம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பை போட்டிக்கு புள்ளி பட்டியலில் டாப்-8 இடங்களை பிடிக்கும் அணிகள் மட்டுமே தகுதி பெற முடியும் என்பதால் இந்த புள்ளிப்பட்டியல் முக்கியத்துவம் பெறுகிறது.