சிறப்பான பந்துவீச்சு: இங்கிலாந்து அணியை வீழ்த்திய ஆஸ்திரேலியா..!!
|இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 33 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது.
அகமதாபாத்,
உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன்படி, ஆஸ்திரேலிய அணியின் சார்பில் தொடக்க வீரர்களாக களம் இறங்கிய டேவிட் வார்னர் மற்றும் டிராவிஸ் ஹெட் முறையே 15 மற்றும் 11 ரன்களில் வெளியேறினர். பின்னர் களம் இறங்கிய ஸ்மித் மற்றும் மார்னஸ் லாபுசேனே இருவரும் நிதானமாக ஆடினர்.
இதில் சிறப்பாக ஆடிய ஸ்டீவன் ஸ்மித் 44 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். பின்னர் அரை சதம் கடந்த மார்னஸ் லாபுசேனே மார்க் வுட் பந்தில் 71 ரன்களில் எல்.பி.டபுள்யு ஆனார். பின்னர் கேமரூன் கிரீன் சிறிது நேரம் நிதானமாக விளையாடி 47 ரன்களும், ஸ்டோய்னிஸ் 35 ரன்களும் சேர்த்தனர். ஆனால் மறுமுனையில் வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். முடிவில் ஆஸ்திரேலியா அணி 49.3 ஓவர்களில் 286 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து அணியின் சார்பில் அதிகபட்சமாக வோக்ஸ் 4 விக்கெட்டுகளும், ரஷித் மற்றும் மார்க் வுட் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
இதனை தொடர்ந்து 287 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணியின் சார்பில் களமிறங்கிய ஜானி பேர்ஸ்டோ (0) ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார். அடுத்து களமிறங்கிய ஜோ ரூட் 13 ரன்களும், அரை சதம் அடித்த டேவிட் மலான் 50 ரன்களும், ஜோஸ் பட்லர் 1 ரன்னும், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பென் ஸ்டோக்ஸ் 64 ரன்களும், லிவிங்ஸ்டன் 2 ரன்னிலும், மொயின் அலி 42 ரன்களும், டேவிட் வில்லி 15 ரன்களும், கிரிஸ் வோக்ஸ் 32 ரன்களும், அடில் ரஷித் 20 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
முடிவில் இங்கிலாந்து அணி 48.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 253 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஆஸ்திரேலியா அணியின் சார்பில் ஆடம் சாம்பா 3 விக்கெட்டுகளும், ஸ்டார்க், ஹேசில் வுட் மற்றும் கம்மின்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் எடுத்தனர்.
இதன்மூலம் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 33 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது. இதன்மூலம் உலகக் கோப்பை புள்ளிப்பட்டியலில் ஆஸ்திரேலியா அணி 10 புள்ளிகளுடன் 3 வது இடத்தில் உள்ளது. 14 புள்ளிகளுடன் முதல் இடத்தில் இந்தியாவும், 12 புள்ளிகளுடன் தென்ஆப்பிரிக்கா 2வது இடத்திலும் உள்ளது. 8 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் நியூசிலாந்து அணி உள்ளது.