மகளிர் டெஸ்ட் கிரிக்கெட்: இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 3-வது நாள் ஆட்டம் - இன்று நடக்கிறது
|இந்திய அணி முதல் இன்னிங்சில் 119 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 376 ரன்கள் குவித்து, 157 ரன்கள் முன்னிலையில் உள்ளது.
மும்பை,
ஆஸ்திரேலிய பெண்கள் அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி 376 ரன்கள் குவித்து வலுவான நிலையில் இருக்கிறது. மந்தனா, தீப்தி உள்பட 4 வீராங்கனைகள் அரைசதம் அடித்தனர்.
இந்தியா - ஆஸ்திரேலியா பெண்கள் கிரிக்கெட் அணிகள் இடையிலான ஒரே ஒரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. 'டாஸ்' ஜெயித்து முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 219 ரன்னில் ஆல்-அவுட் ஆனது.
பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா தொடக்க நாளில் ஒரு விக்கெட்டுக்கு 98 ரன்கள் எடுத்திருந்தது. துணை கேப்டன் ஸ்மிர்தி மந்தனா (43 ரன்), சினே ராணா (9 ரன்) களத்தில் இருந்தனர்.
இந்த நிலையில் 2-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய இந்திய பேட்டர்கள் வெகுவாக ஆதிக்கம் செலுத்தினர். தனது 3-வது அரைசதத்தை பூர்த்தி செய்த மந்தனா 74 ரன்னில் (106 பந்து, 12 பவுண்டரி) ரன்-அவுட்டில் வீழ்ந்தார். சினே ராணா 9 ரன்னில் வெளியேறினார். மிடில் வரிசையில் அறிமுக வீராங்கனை ரிச்சா கோஷ் (52 ரன்), ஜெமிமா ரோட்ரிக்ஸ் (73 ரன், 121 பந்து, 9 பவுண்டரி) அரைசதம் விளாசி ஸ்கோருக்கு மேலும் வலுவூட்டினர். ஆனால் இவர்களுக்கு பிறகு வந்த கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் (0) விக்கெட் கீப்பர் யாஸ்திகா பாட்டியா (1 ரன்) ஆஷ்லி கார்ட்னெரின் சுழலில் சிக்கினர். 14 ரன் இடைவெளியில் 4 விக்கெட் சரிந்ததால் இந்தியா சற்று தடுமாற்றத்திற்கு உள்ளானது.
இந்த சூழலில் 8-வது விக்கெட்டுக்கு ஆல்-ரவுண்டர்கள் தீப்தி ஷர்மாவும், பூஜா வஸ்ட்ராகரும் கைகோர்த்து பொறுப்புடன் ஆடி அணியை நிமிர வைத்தனர். 2 மணி நேரத்திற்கு மேலாக தாக்குப்பிடித்த இந்த ஜோடியை 8 பவுலர்களை பயன்படுத்தியும் ஆஸ்திரேலியாவால் பிரிக்க முடியவில்லை.
2-வது நாள் முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 119 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 376 ரன்கள் குவித்து, 157 ரன்கள் முன்னிலையுடன் வலுவான நிலையை எட்டியிருக்கிறது. தீப்தி ஷர்மா 70 ரன்னுடனும் (147 பந்து, 9 பவுண்டரி), பூஜா வஸ்ட்ராகர் 33 ரன்னுடனும் (115 பந்து, 4 பவுண்டரி) களத்தில் உள்ளனர். தனது 4-வது டெஸ்டில் ஆடும் தீப்தி ஷர்மா 4 போட்டியிலும் அரைசதம் அடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலிய தரப்பில் கார்ட்னெர் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதைத் தொடர்ந்து 3-வது நாள் ஆட்டம் இன்று நடக்கிறது.