மகளிர் டெஸ்ட் கிரிக்கெட்; தீப்தி ஷர்மா அபார பந்துவீச்சு...இங்கிலாந்தை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய இந்தியா...!
|இரு இன்னிங்சையும் சேர்த்து தீப்தி ஷர்மா மொத்தம் 9 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
மும்பை,
இங்கிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் 1 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாடுகிறது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையே முதலில் நடைபெற்ற டி20 தொடரை இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையே 4 நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டி கடந்த 14ம் தேதி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 428 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. இந்திய அணி தரப்பில் சுபா சதீஷ், ஜெமிமா ரோட்ரிக்ஸ், யாஸ்திகா பாட்டியா மற்றும் தீப்தி ஷர்மா ஆகிய 4 வீராங்கனைகள் அரைசதம் அடித்து அசத்தினர்.
பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து வீராங்கனைகள் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் விரைவில் ஆட்டமிழந்தனர். இங்கிலாந்து அணி தரப்பில் நாட் ஸ்கிவர்-ப்ரண்ட் தவிர மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். வெறும் 35.3 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 136 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
அந்த அணி தரப்பில் அதிகபட்சமாக நாட் ஸ்கிவர்-ப்ரண்ட் 59 ரன்கள் அடித்தார். இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக தீப்தி சர்மா 5 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தினார். இதனையடுத்து 292 ரன்கள் முன்னிலை என்ற வலுவான நிலையில் தனது 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 2-ம் நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 186 ரன்கள் அடித்து 478 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது.
கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 44 ரன்களுடனும், பூஜா வஸ்த்ரகர் 17 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்நிலையில் 3ம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. தொடர்ந்து பேட்டிங் செய்யும் என எதிர்பார்த்த இந்திய அணி நேற்றைய ஸ்கோருடன் (186/6) டிக்ளேர் செய்தது. இதையடுத்து 479 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி தனது 2வது இன்னிங்சை ஆடியது.
இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சை போல் இந்தியாவின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறியது. வெறும் 27.3 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 131 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.
இதன் மூலம் இந்திய அணி 347 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தியா தரப்பில் தீப்தி ஷர்மா 4 விக்கெட்டும், பூஜா வஸ்த்ரகர் 3 விக்கெட்டும் வீழ்த்தினர். இரு இன்னிங்சையும் சேர்த்து தீப்தி ஷர்மா மொத்தம் 9 விக்கெட்டுகள் கைப்பற்றினார். இதையடுத்து 1 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றியது.