< Back
கிரிக்கெட்
மகளிர் டி20 உலகக்கோப்பை; எங்களால் எந்த அணியையும் வீழ்த்த முடியும் - ஹர்மன்பிரீத் கவுர்

Image Grab On Video Posted By @BCCIWomen

கிரிக்கெட்

மகளிர் டி20 உலகக்கோப்பை; எங்களால் எந்த அணியையும் வீழ்த்த முடியும் - ஹர்மன்பிரீத் கவுர்

தினத்தந்தி
|
25 Sept 2024 10:51 AM IST

மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர் துபாய் மற்றும் ஷார்ஜாவில் அக்டோபர் 3ம் தேதி முதல் 20ம் தேதி வரை நடைபெற உள்ளது.

மும்பை,

10 அணிகள் இடையிலான 9-வது ஐ.சி.சி. மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர் துபாய் மற்றும் ஷார்ஜாவில் அக்டோபர் 3ம் தேதி முதல் 20ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தொடரில் கலந்து கொள்ளும் 10 அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

அதில் குரூப் ஏ-யில் ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை அணிகளும், குரூப் பி-யில் தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், வங்காளதேசம், ஸ்காட்லாந்து அணிகளும் இடம் பிடித்துள்ளன.

இந்த தொடரை முன்னிட்டு 10 நாடுகளும் தங்களது அணிகளை அறிவித்துவிட்டன. இந்த தொடருக்கான இந்திய அணி ஹர்மன்பிரீத் கவுர் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த போட்டி தொடருக்காக இந்திய மகளிர் அணி நேற்று துபாய் புறப்பட்டது. இந்த போட்டிக்கு புறப்படுவதற்கு முன்பாக இந்திய மகளிர் அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,

சாம்பியன் பட்டம் வெல்வதே எங்களது இலக்கு. ஒரு அணியாக அதற்காகத் தான் முயற்சிக்கிறோம். எப்போதும் அணிக்கு ஆதரவாக இருக்கும் ரசிகர்கள் மற்றும் நாட்டுக்காக கோப்பையை வென்று கொண்டுவர வேண்டும் என்பதே ஒரே எதிர்பார்ப்பு. அதை இந்த தடவை செய்ய முடியும் என்று நம்புகிறேன்.

ஆஸ்திரேலியாவில் நடந்த 20 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் இறுதிப்போட்டி வரை சென்றோம். கடந்த ஆண்டு தென்ஆப்பிரிக்காவில் நடந்த போட்டியில் இறுதி சுற்றை நெருங்கி வந்து தோல்வி அடைந்தோம். சில வீராங்கனைகள் நீண்ட காலமாக விளையாடி வருகிறார்கள். அணியில் தங்களுக்குரிய பங்களிப்பு என்ன என்பது அவர்களுக்கு தெரியும்.

ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற அணிகள் கடும் சவாலாக இருக்கும். எங்களால் எந்த அணியையும் வீழ்த்த முடியும். இது ஆஸ்திரேலிய அணிக்கும் நன்கு தெரியும். தங்களை ஒரு அணியால் வீழ்த்த முடியும் என்றால் அது இந்தியா தான் என்பதை ஆஸ்திரேலியர்கள் அறிவார்கள்.

என்னை பொறுத்தவரை பல உலகக் கோப்பை போட்டிகளில் பங்கேற்ற அனுபவம் உள்ளது. 19 வயதில் எப்படி ஆடினேனோ அதே உத்வேகத்துடன் இப்போதும் விளையாட விரும்புகிறேன். துபாய், ஷார்ஜாவில் ஆடும் போது அதிக எண்ணிக்கையில் ரசிகர்கள் வருகை தருவார்கள் என்று நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்