கிரிக்கெட்
மகளிர் டி20 உலகக்கோப்பை; இந்தியாவுக்கு இந்த அணிதான் கடும் சவாலாக இருக்கும் - ஹர்பஜன் சிங்

Image Courtacy: ICC / File Image

கிரிக்கெட்

மகளிர் டி20 உலகக்கோப்பை; இந்தியாவுக்கு இந்த அணிதான் கடும் சவாலாக இருக்கும் - ஹர்பஜன் சிங்

தினத்தந்தி
|
4 Oct 2024 8:10 AM IST

9-வது மகளிர் டி20 உலகக் கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் சார்ஜாவில் நடைபெற்று வருகிறது.

புதுடெல்லி,

9-வது மகளிர் டி20 உலகக் கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் சார்ஜாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் கலந்து கொண்டுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. அதன்படி ஏ பிரிவில் இந்தியா, நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இலங்கை, பாகிஸ்தான் அணிகளும், 'பி' பிரிவில் இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், வங்காளதேசம், ஸ்காட்லாந்து அணிகளும் இடம் பெற்றுள்ளன.

லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும். இந்நிலையில், இந்த தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. அதில் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோத உள்ளன.

இந்நிலையில், மகளிர் டி20 உலகக் கோப்பை போட்டி குறித்து இந்திய வீராங்கனைகளுக்கு முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் சில அறிவுரைகளை வழங்கியுள்ளார். இது தொடர்பாக அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியதாவது, இந்திய அணி தனது பிரிவில் ஆஸ்திரேலியாவுடன் விளையாடும் போது மிகவும் கவனமுடன் செயல்பட வேண்டியது அவசியமாகும். இந்த பிரிவில் இந்தியா - ஆஸ்திரேலியா ஆட்டமே கொஞ்சம் கடினமாக இருக்கும் என நினைக்கிறேன்.

இந்த பிரிவு ஆட்டங்கள் அனைத்தும் துபாயில் நடக்கிறது. இந்திய துணை கண்டத்து ஆடுகளங்கள் ஆஸ்திரேலியாவுக்கு பெரிய அளவில் உகந்ததாக இருக்காது. ஆனாலும் அவர்களை பொறுத்த வரை எங்கு விளையாடுகிறோம் என்பது ஒரு பொருட்டே அல்ல. உலகின் எங்கு போட்டி நடந்தாலும் ஆஸ்திரேலியாவை தோற்கடிப்பது கடினம் தான். எனவே இந்தியாவுக்கு ஆஸ்திரேலியா தான் கடும் சவாலாக இருக்கும்.

இலங்கை அணி சமீபத்தில் ஆசிய கோப்பை கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் இந்தியாவை தோற்கடித்தது. இதனால் அவர்கள் இந்தியாவை சந்திக்கும் போது மிகுந்த நம்பிக்கையுடன் இருப்பார்கள். எனவே இந்தியா- இலங்கை ஆட்டமும் நல்ல மோதலாக இருக்கும். இந்தியா ஒட்டுமொத்தத்தில் மிகச்சிறந்த கிரிக்கெட்டை விளையாடினால் கோப்பையை வெல்ல முடியும் என்று நம்புகிறேன்.

நமது வீராங்கனைகள் தங்களது மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சிக்க வேண்டும். நெருக்கடிக்குள்ளாகக் கூடாது. ஒரு அணியாக செயல்படுங்கள். முடிவு தானாக கிடைக்கும். அதிகமாக முன்னோக்கி யோசிக்காமல் ஒவ்வொரு ஆட்டமாக கவனம் செலுத்துங்கள். இதை சரியாக பின்பற்றினால் அணி நன்றாக செயல்படும். இது தான் அவர்களுக்கு நான் வழங்கும் அறிவுரை. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்