பெண்கள் டி20 உலகக்கோப்பை: ரிச்சா கோஷ் போராட்டம் வீண் - இந்தியாவை வீழ்த்தி இங்கிலாந்து வெற்றி...!
|இந்திய அணி தரப்பில் ஸ்மிருதி மந்தனா அரைசதம் அடித்தார்
கெபேஹா,
10 அணிகள் இடையிலான 8-வது பெண்கள் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தென்ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது. இதில் இன்று இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் இந்தியா- இங்கிலாந்து அணிகள் ஆடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது.
இதையடுத்து இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் எடுத்தது. அந்த அணி தரப்ப்பில் ஸ்கீவர் புரூண்ட் 50 ரன், எமி ஜோன்ஸ் 40 ரன் எடுத்தனர். இந்தியா தரப்பில் அபாரமாக பந்துவீசிய ரேனுகா சிங் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதையடுத்து 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களம் இறங்கியது.
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக மந்தனா மற்றும் ஷபாலி வர்மா ஆகியோர் களம் புகுந்தனர். இதில் ஷபாலி 8 ரன்னிலும் அடுத்து வந்த ஜெமிமா 13 ரன், கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 4 ரன் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து இந்தியா தடுமாறியது.
இதையடுத்து மந்தனாவுடன் அதிரடி ஆட்டக்காரர் ரிச்சா கோஷ் களம் புகுந்தார். நிலைத்து நின்று ஆடிய மந்தனா அரைசதம் அடித்த நிலையில் 52 ரன்னுக்கு ஆட்டம் இழந்தார். இதையடுத்து தீப்தி ஷர்மா களம் இறங்கினார். இறுதியில் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 140 ரன்களே எடுத்தது. இதனால் இங்கிலாந்து அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தனது 3வது வெற்றியை பதிவு செய்தது.
இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் அயர்லாந்தை கட்டாயம் வீழ்த்தியே ஆக வேண்டும் என்ற நெருக்கடியில் 20ம் தேதி சந்திக்கிறது.