பெண்கள் டி20 உலகக் கோப்பை: இங்கிலாந்து-வெஸ்ட் இண்டீஸ் இன்று மோதல்
|8-வது பெண்கள் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தென் ஆப்பிரிக்காவில் நேற்றிரவு தொடங்கியது.
கேப்டவுன்,
8-வது பெண்கள் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தென் ஆப்பிரிக்காவில் நேற்றிரவு தொடங்கியது. வருகிற 26-ந் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.
'ஏ' பிரிவில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்ஆப்பிரிக்கா, இலங்கை, வங்காளதேசமும், 'பி' பிரிவில் இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், வெஸ்ட்இண்டீஸ், அயர்லாந்தும் இடம் பெற்றுள்ளன. இதில் ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.
இந்த போட்டி தொடரில் இன்று (சனிக்கிழமை) பார்ல் நகரில் இரண்டு லீக் ஆட்டங்கள் நடக்கிறது. இதில் ஒரு ஆட்டத்தில் ஹீதர் நைட் தலைமையிலான இங்கிலாந்து அணி, ஹேய்லி மேத்யூஸ் தலைமையிலான வெஸ்ட் இண்டீசை எதிர்கொள்கிறது. இந்த போட்டி இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு தொடங்குகிறது. இவ்விரு அணிகள் இதுவரை நேருக்கு நேர் மோதிய 24 இருபது ஓவர் சர்வதேச போட்டிகளில் 14-ல் வெஸ்ட்இண்டீசும், 10-ல் இங்கிலாந்தும் வெற்றி பெற்றுள்ளன.
இரவு 10.30 மணிக்கு தொடங்கும் மற்றொரு லீக் ஆட்டத்தில் மெக் லானிங் தலைமையிலான நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா-சோபி டிவைன் தலைமையிலான நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இவ்விரு அணிகளும் இதுவரை நேருக்கு நேர் மோதிய 16 ஆட்டங்களில் 10-ல் ஆஸ்திரேலியாவும், 6-ல் நியூசிலாந்தும் வெற்றி கண்டுள்ளன. 6-வது முறையாக உலகக் கோப்பையை குறிவைக்கும் ஆஸ்திரேலியா வெற்றியோடு தொடங்கும் ஆவலில் உள்ளது. இந்த போட்டிகளை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
இந்திய அணி தனது முதலாவது லீக்கில் பாகிஸ்தானை நாளை (ஞாயிற்றுக்கிழமை) சந்திக்கிறது. இந்திய அணிக்கு திடீர் பின்னடைவாக தொடக்க வீராங்கனையும், துணை கேப்டனுமான ஸ்மிருதி மந்தனா பயிற்சி ஆட்டத்தின் போது இடது கைவிரலில் ஏற்பட்ட காயத்தில் இருந்து இன்னும் முழுமையாக மீளவில்லை. இதனால் அவர் பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது ஆட்டத்தில் விளையாட மாட்டார் என்று ஐ.சி.சி. வட்டாரங்கள் தெரிவித்தன.