பெண்கள் டி20 உலகக்கோப்பை; இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இன்று மோதல்
|கடைசி லீக் போட்டியில் இங்கிலாந்து அணி, வெஸ்ட் இண்டீசுடன் மோதுகிறது .
துபாய்,
9-வது பெண்கள் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் சார்ஜாவில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.'ஏ' பிரிவில் இந்தியா, நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை அணிகளும், 'பி' பிரிவில் இங்கிலாந்து, வெஸ்ட்இண்டீஸ், தென்ஆப்பிரிக்கா, வங்காளதேசம், ஸ்காட்லாந்து அணிகளும் இடம் பெற்றுள்ளன.
இன்றிரவு 7.30 மணிக்கு நடைபெறும் கடைசி லீக் போட்டியில் ஹீதர் நைட் தலைமையிலான இங்கிலாந்து அணி, ஹெய்லி மேத்யூஸ் தலைமையிலான வெஸ்ட் இண்டீசுடன் மோதுகிறது .
6 புள்ளிகளுடன் 'பி' பிரிவில் முதலிடம் வகிக்கும் இங்கிலாந்து அணி இன்றைய ஆட்டத்தில் வெற்றி கண்டால், சிக்கலின்றி அரையிறுதிக்குள் நுழையும். தென்ஆப்பிரிக்காவுக்கும் (6 புள்ளி) அடுத்த சுற்று வாய்ப்பு கிடைக்கும். வெஸ்ட் இண்டீஸ் அணி வெளியேறும்
மாறாக வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்றால் அதனுடன் சேர்ந்து இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா ஆகிய மூன்று அணிகளும் தலா 6 புள்ளிகளுடன் சமநிலையில் இருக்கும். அவ்வாறான சூழலில் வெஸ்ட் இண்டீஸ் ரன்ரேட்டில் வலுவாக இருப்பதால் அரையிறுதிக்கு முன்னேறி விடும். இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா அணிகளில் யார் ரன்ரேட்டில் முன்னணியில் இருக்கிறார்களோ அந்த அணி அரையிறுதிக்கு தகுதி பெறும் .