மகளிர் டி20 உலகக்கோப்பை: அமெலியா கெர் அபார பந்துவீச்சு... ஆஸ்திரேலியா 148 ரன்கள் சேர்ப்பு
|நியூசிலாந்து தரப்பில் அதிகபட்சமாக அமெலியா கெர் 4 விக்கெட் வீழ்த்தினார்.
துபாய்,
9-வது மகளிர் டி20 உலகக் கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் சார்ஜாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் கலந்து கொண்டுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. அதன்படி ஏ பிரிவில் இந்தியா, நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இலங்கை, பாகிஸ்தான் அணிகளும், 'பி' பிரிவில் இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், வங்காளதேசம், ஸ்காட்லாந்து அணிகளும் இடம் பெற்றுள்ளன.
இந்நிலையில், இன்றிரவு நடைபெற்று வரும் லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகள் ஆடி வருகின்றன. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதையடுத்து ஆஸ்திரேலியாவின் தொடக்க ஆட்டக்காரர்களாக அலிசா ஹீலி மற்றும் பெத் மூனி ஆகியோர் களம் இறங்கினர்.
இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்கள் சேர்த்தனர். இதில் அலிசா ஹீலி 26 ரன்னிலும், பெத் மூனி 40 ரன்னிலும் அவுட் ஆகினர். இதையடுத்து களம் இறங்கிய எல்லிஸ் பெர்ரி 30 ரன்னிலும், போப் லிட்ச்பீல்ட் 18 ரன்னிலும், கிரேஸ் ஹாரிஸ் ரன் எடுக்காமலும், ஜார்ஜியா வேர்ஹாம் 4 ரன்னிலும், ஆஷ்லே கார்ட்னர் 4 ரன்னிலும் அவுட் ஆகினர்.
இதையடுத்து அன்னாபெல் சதர்லேண்ட் - தஹ்லியா மெக்ராத் ஜோடி சேர்ந்தனர். இறுதியில் ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலியா தரப்பில் அதிகபட்சமாக பெத் மூனி 40 ரன் எடுத்தார். நியூசிலாந்து தரப்பில் அதிகபட்சமாக அமெலியா கெர் 4 விக்கெட் வீழ்த்தினார். இதையடுத்து 149 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து ஆட உள்ளது.