மகளிர் டி20 தரவரிசை: ஏற்றம் கண்ட இந்திய வீராங்கனைகள்
|மகளிர் டி20 தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) வெளியிட்டுள்ளது.
துபாய்,
மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடைபெற்றது. இந்த தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணியை வீழ்த்திய இலங்கை முதல் முறையாக ஆசிய கோப்பையை வென்று வரலாறு படைத்தது. இந்நிலையில் இந்த தொடர் நிறைவடைந்ததை அடுத்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) மகளிருக்கான புதிய டி20 தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.
இந்த பட்டியலில் ஆசிய கோப்பை தொடரில் சிறப்பாக செயல்பட்ட இந்திய மற்றும் இலங்கை வீராங்கனைகள் ஏற்றம் கண்டுள்ளனர். இதில் பேட்டிங் தரவரிசையில் முதல் 3 இடங்களில் முறையே ஆஸ்திரேலியாவின் பெத் மூனி (769 புள்ளி), தஹ்லியா மெக்ராத் (762 புள்ளி), வெஸ்ட் இண்டீசின் ஹேலி மேத்யூஸ் (746 புள்ளி) ஆகியோர் உள்ளனர்.
இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா ஒரு இடம் முன்னேறி (743 புள்ளி) 4வது இடத்திற்கு வந்துள்ளார். 5வது இடத்தில் தென் ஆப்பிரிக்காவின் லாரா வோல்வார்ட்டும் (736 புள்ளி), 3 இடம் ஏற்றம் கண்ட இலங்கை கேப்டன் சமாரி அத்தபத்து (705 புள்ளி) 6வது இடத்திலும் உள்ளனர்.
பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் முதல் 3 இடங்களில் முறையே இங்கிலாந்தின் சோபி எக்லெஸ்டோன் (772 புள்ளி), சாரா க்ளென் (760 புள்ளி) மற்றும் இந்தியாவின் தீப்தி சர்மா (755 புள்ளி) ஆகியோர் உள்ளனர். இதையடுத்து பாகிஸ்தானின் சாடியா இக்பால் (743 புள்ளி) ஒரு இடம் ஏற்றம் கண்டு 4வது இடத்திலும், இந்தியாவின் ரேணுகா சிங் (722 புள்ளி) 4 இடம் ஏற்றம் கண்டு 5வது இடத்திலும் உள்ளனர்.
ஆல்ரவுண்டர்கள் தரவரிசையில் வெஸ்ட் இண்டீசின் ஹேல்லி மேத்யூஸ் (524 புள்ளி) முதல் இடத்திலும், ஆஸ்திரேலியாவின் ஆஷ்லே கார்ட்னர் (401 புள்ளி) 2வது இடத்திலும், இந்தியாவின் தீப்தி சர்மா (396 புள்ளி) 3வது இடத்திலும் உள்ளனர்.