< Back
கிரிக்கெட்
பெண்கள் டி20 கிரிக்கெட்; பரபரப்பான ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய வெஸ்ட் இண்டீஸ்

Image Courtesy: @ICC

கிரிக்கெட்

பெண்கள் டி20 கிரிக்கெட்; பரபரப்பான ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய வெஸ்ட் இண்டீஸ்

தினத்தந்தி
|
1 May 2024 1:16 AM IST

பாகிஸ்தான் அணியால் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 130 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

கராச்சி,

வெஸ்ட் இண்டீஸ் பெண்கள் கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் ஒருநாள் தொடரை 3-0 என வெஸ்ட் இண்டீஸ் கைப்பற்றியது. இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான டி20 தொடர் நடைபெற்று வருகிறது.

இதில் 2 போட்டிகள் முடிவில் 2-0 என வெஸ்ட் இண்டீஸ் முன்னிலை பெற்றுள்ளது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 3வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 132 ரன்கள் எடுத்தது.

வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அதிகபட்சமாக ஹேலி மேத்யூஸ் 68 ரன்கள் எடுத்தார். பாகிஸ்தான் தரப்பில் பாத்திமா சனா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதையடுத்து 133 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களம் இறங்கியது.

பாகிஸ்தானின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஆயிஷா ஜாபர் மற்றும் சித்ரா அமீன் ஆகியோர் களம் இறங்கினர். இதில் ஆயிஷா ஜாபர் 19 ரன்னில் அவுட் ஆனார். இதையடுத்து களம் இறங்கிய முனீபா அலி 12 ரன், நிதா டார் 17 ரன், அலியா ரியாஸ் 1 ரன் எடுத்து ஆட்டம் இழந்தனர்.

மறுமுனையில் நிலைத்து நின்று ஆடிய சித்ரா அமீன் 63 ரன் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். இதையடுத்து களம் இறங்கிய வீராங்கனைகள் சொற்ப ரன்களில் வெளியேறினர். இறுதியில் பாகிஸ்தான் அணியால் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 130 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

இதன் மூலம் பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி 2 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றதுடன் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-0 என கைப்பற்றியது. இரு அணிகளுக்கும் இடையிலான 4வது டி20 போட்டி நாளை நடைபெறுகிறது.

மேலும் செய்திகள்