< Back
கிரிக்கெட்
பெண்கள் டி20 கிரிக்கெட்; டி.எல்.எஸ் முறையில் வங்காளதேசத்தை வீழ்த்தி வெற்றி பெற்ற இந்தியா

Image Courtesy: @BCCIWomen

கிரிக்கெட்

பெண்கள் டி20 கிரிக்கெட்; டி.எல்.எஸ் முறையில் வங்காளதேசத்தை வீழ்த்தி வெற்றி பெற்ற இந்தியா

தினத்தந்தி
|
30 April 2024 10:50 PM IST

இரு அணிகளுக்கும் இடையிலான 3வது டி20 போட்டி நாளை மறுநாள் (மே-2) நடைபெற உள்ளது.

சில்ஹெட்,

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று ஆடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் இருந்தது.

இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான 2வது டி20 போட்டி இன்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய வங்காளதேச அணி 20 ஒவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 119 ரன்கள் மட்டுமே எடுத்தது.

வங்காளதேச அணி தரப்பில் அதிகபட்சமாக முர்ஷிதா காதுன் 46 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் ராதா யாதவ் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதையடுத்து 120 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஸ்மிருதி மந்தனா மற்றும் ஷபாலி வர்மா ஆகியோர் களம் இறங்கினர்.

இதில் ஷபாலி வர்மா டக் அவுட் ஆனார். இதையடுத்து தயாளன் ஹேமலதா களம் இறங்கினார். இவர் வங்காளதேசத்தின் பந்துவீச்சை அடித்து நொறுக்கினார். இந்திய அணி 5.2 ஓவர்களில் 1 விக்கெட்டை இழந்து 47 ரன்கள் எடுத்திருந்த போது மழை பெய்தது.

இதையடுத்து ஆட்டம் பாதிக்கப்பட்டது. மழை நின்றதும் ஆட்டம் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் நீண்ட நேரம் ஆகியும் மழை நிற்காததால் டி.எல்.எஸ் முறைப்பட்டி 19 ரன் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2-0 என இந்திய அணி முன்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான 3வது டி20 போட்டி நாளை மறுநாள் (மே-2) நடைபெற உள்ளது.

மேலும் செய்திகள்