பெண்கள் பிரீமியர் லீக்: எல்லிஸ் பெர்ரிக்கு நினைவு பரிசு வழங்கிய டாடா நிறுவனம்
|பெண்கள் பிரீமியர் லீக் தொடரில் ஆஸ்திரேலிய வீராங்கனை எல்லிஸ் பெர்ரி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடி வருகிறார்.
பெங்களூரு,
2-வது பெண்கள் பிரீமியர் லீக் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நாளை நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் மந்தனா தலைமையிலான பெங்களூரு அணியும், மெக் லானிங் தலைமையிலான டெல்லி அணியும் பலப்பரீட்சை நடத்த உள்ளன. நேற்று நடைபெற்ற எலிமினேட்டர் சுற்றில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்சை வீழ்த்தி ஆர்.சி.பி. இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இந்த தொடரில் ஆஸ்திரேலிய வீராங்கனை எல்லிஸ் பெர்ரி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடி வருகிறார். முன்னதாக இந்த தொடரில் பெங்களூரு - உபி வாரியர்ஸ் அணிகளுக்கு இடையிலான லீக் போட்டி கடந்த 4-ந்தேதி சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது.
அந்த போட்டியின்போது எல்லிஸ் பெர்ரி அடித்த பந்து மைதானத்தின் பவுண்டரி லைனுக்கு வெளியே தொடரில் சிறந்த வீராங்கனைக்காக வழங்க இருந்த டாடா காரின் கண்ணாடியை தாக்கியது. அதில் கண்ணாடி உடைந்து சிதறியது.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியின் முடிவில் காரின் உடைந்த கண்ணாடியை பிரேம் செய்த டாடா நிறுவனம் அதனை எல்லிஸ் பெர்ரிக்கு நினைவு பரிசாக வழங்கி உள்ளது. அத்துடன் அதில் "பெர்ரி பவர்புல்பஞ்ச் என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது.