பெங்களூரு மற்றும் டெல்லியில் நடைபெற உள்ள மகளிர் பிரிமீயர் லீக் தொடர்...வெளியான தகவல்..!
|இந்த தொடரின் 2-வது சீசன் வரும் பிப்ரவரி மாதம் 2 அல்லது 3-வது வாரத்தில் தொடங்கப்படும் என்று இந்திய கிரிக்கெட் வாரிய (பிசிசிஐ ) செயலாளர் ஜெய் ஷா தெரிவித்து இருந்தார்.
மும்பை,
மகளிருக்கான பிரிமீயர் லீக் கிரிக்கெட் தொடர் (டபிள்யூ.பி.எல்.) கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. அதன்படி கடந்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற இதன் முதலாவது சீசனில் மும்பை அணி சாம்பியன் பட்டம் வென்றது. மேலும் இந்த தொடரின் போட்டிகள் அனைத்தும் மராட்டிய மாநிலம் மும்பையில் மட்டுமே நடத்தப்பட்டன.
இந்த தொடரின் 2-வது சீசன் வரும் பிப்ரவரி மாதம் 2 அல்லது 3-வது வாரத்தில் தொடங்கப்படும் என்று இந்திய கிரிக்கெட் வாரிய (பிசிசிஐ ) செயலாளர் ஜெய் ஷா தெரிவித்து இருந்தார். மேலும் நடமுறை சிக்கல் காரணமாக இந்த முறையும் ஒரே மாநிலத்திலேயே நடத்தப்படும் என்று அறிவித்திருந்தார்.
இந்நிலையில் டபிள்யூ.பி.எல். தொடரின் 2-வது சீசன் பெங்களூரு மற்றும் டெல்லியில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இதன் லீக் போட்டிகள் அனைத்தும் பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்திலும், பிளே ஆப் மற்றும் இறுதிப்போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.