பெண்கள் பிரிமீயர் லீக்: டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளராக ஜோனதான் பேட்டி நியமனம்...!
|பெண்கள் பிரிமீயர் லீக்கின் டெல்லி அணி நிர்வாகம் தங்களது பயிற்சியாளர் குழுவை அறிவித்துள்ளது.
மும்பை,
ஆண்களுக்கான ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு தொடங்கி வெற்றிகரமாக வீறுநடை போட்டு வருகிறது. இதே போல் பெண்களுக்கான ஐ.பி.எல். போட்டி நடத்த வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை ஏற்று இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் பெண்களுக்கான முதலாவது ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மார்ச் மாதம் மும்பையில் நடத்தப்படுகிறது.
இந்த போட்டிக்கு 'பெண்கள் பிரீமியர் லீக்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த தொடரில் மொத்தம் 5 அணிகள் கலந்து கொள்கின்றன. இந்த 5 அணிகளின் ஏலம் மூலமாக பிசிசிஐ 4669.99 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. இதில் அகமதாபாத், மும்பை, பெங்களூரு, டெல்லி, லக்னோ ஆகிய இடங்களின் அடிப்படையில் அணிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இதில் ஆண்கள் ஐபிஎல் தொடரில் டெல்லி அணி நிர்வாகமே பெண்கள் பிரிமீயர் லீக்கின் டெல்லி அணியையும் வாங்கி உள்ளது. இந்நிலையில் டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளராக ஜோனதான் பேட்டி நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் பீல்டிங் பயிற்சியாளராக பிஜூ ஜார்ஜ் மற்றும் உதவி பயிற்சியாளர்களாக ஹேமலதா கலா மற்றும் லிசா கெய்ட்லி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.