பெண்கள் பிரீமியர் லீக்; ஜோனாசென், ராதா யாதவ் அபார பந்துவீச்சு..குஜராத்தை வீழ்த்தி டெல்லி வெற்றி
|5 அணிகள் பங்கேற்றுள்ள 2-வது பெண்கள் பிரீமியர் லீக் (டபிள்யூ.பி.எல்.) கிரிக்கெட் போட்டி பெங்களூருவில் நடந்து வருகிறது.
பெங்களூரு,
5 அணிகள் பங்கேற்றுள்ள 2-வது பெண்கள் பிரீமியர் லீக் (டபிள்யூ.பி.எல்.) கிரிக்கெட் போட்டி பெங்களூருவில் நடந்து வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் - குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின.
இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற குஜராத் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக மெக் லேனிங் மற்றும் ஷபாலி வர்மா ஆகியோர் களம் இறங்கினர். இதில் ஷபாலி வர்மா 13 ரன்னிலும், அடுத்து வந்த அலிஸ் கேப்ஸி 27 ரன்னிலும், ஜெமிமா 7 ரன்னிலும் அவுட் ஆகினர்.
இதையடுத்து லேனிங்குடன் சதர்லேண்ட் ஜோடி சேர்ந்தார். ஒருமுனையில் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் மறுமுனையில் நிலைத்து நின்று ஆடிய லேனிங் அரைசதம் அடித்த நிலையில் 55 ரன்களில் அவுட் ஆனார். இறுதியில் டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து 164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பெத் மூனி, லாரா வோல்வார்ட் களம் இறங்கினர். இதில் மூனி 12 ரன்னிலும், வோல்வார்ட் ரன் எடுக்காமலும் அவுட் ஆகினர். அடுத்து களம் இறங்கிய போப் லிட்ச்பீல்ட் 15 ரன், வேதா கிருஷ்ணமூர்த்தி 12 ரன், கார்ட்னெர் 40 ரன், கேத்ரின் பிரைஸ் 3 ரன் எடுத்து அடுத்தடுத்து அவுட் ஆகினர்.
இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் குஜராத் அணியால் 8 விக்கெட்டுகளை இழந்து 138 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் மூலம் 25 ரன் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றது. குஜராத் தரப்பில் அதிகபட்சமாக கார்ட்னெர் 40 ரன்கள் அடித்தார். டெல்லி அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய ஜோனாசென், ராதா யாதவ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.