பெண்கள் பிரீமியர் லீக்: இறுதி போட்டிக்குள் நுழைந்தது டெல்லி கேப்பிடல்ஸ் அணி!
|உ.பி.வாரியர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மும்பை,
முதலாவது பெண்கள் பிரிமீயர் லீக் (டபிள்யூ.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மும்பையில் நடந்து வருகிறது. இதில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், உ.பி.வாரியர்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், குஜராத் ஜெய்ண்ட்ஸ் உள்ளிட்ட 5 அணிகள் பங்கேற்றன. இதில் 5 அணிகளும் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும்.
லீக் சுற்று முடிவில் டாப்-3 இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றுக்கு (பிளே-ஆப்) முன்னேறும். அதாவது புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடிக்கும் அணி நேரடியாக இறுதிப்போட்டியில் விளையாடும். 2-வது மற்றும் 3-வது இடத்தை பிடிக்கும் அணிகள் வெளியேற்றுதல் (எலிமினேட்டர்) சுற்றில் மோதி அதில் வெற்றி பெறும் அணி 2-வது அணியாக இறுதிசுற்றை எட்டும்.
டெல்லி , மும்பை , உ.பி. வாரியர்ஸ் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. இந்த நிலையில், இன்று இரவு 7.30 மணிக்கு பிரபோர்ன் ஸ்டேடியத்தில் தொடங்கிய ஆட்டத்தில் அலிசா ஹீலே தலைமையிலான உ.பி.வாரியர்ஸ் அணி மெக் லானிங் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்சுடன் மோதியது.
இதில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி உ.பி. வாரியர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஹீலே-ஷ்ரேயா ஷராவத் ஜோடி களமிறங்கியது.
இதில் ஸ்ரேயா ஷராவத் 19 ரன்களில் அவுட்டாகி வெளியேற, அடுத்து வந்த சிம்ரன் ஷேக் 11 ரன்களில் கேட்ச் ஆகி விக்கெட்டை இழந்தார். ஹீலே 4 பவுண்டரிகளை விளாசி 36 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த தாலியா மெக்ராத் நிதனாமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
ஒருபுறம் விக்கெட்டுகள் சரிந்தபடி இருக்க, மறுபுறம் தாலியா மெக்ராத் அரைசதத்தைக் கடந்து(58 ரன்கள்) இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இறுதியில் உ.பி.வாரியர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 138 ரன்கள் எடுத்தது.
அடுத்து பேட்டிங் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக மெக் லானிங்-ஷெபாலி வர்மா களமிறங்கினர். இதில் ஷெபாலி வர்மா 4 பவுண்டரிகளுடன் 21 ரன்களில் அவுட் ஆனார். அடுத்து வந்த ஜெமிமா ரோட்ரிகுவெஸ் 3 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
மெக் லானிங் 39 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், மரிசேன் காப்-அலீஸ் கேப்சி உடன் இணைந்து ரன் சேகரிப்பில் ஈடுபட்டார். இதில் அலீஸ் கேப்சி 34 ரன்களில் அவுட் ஆகி வெளியேற, மரிசேன் காப்(34 ரன்கள், 4 பவுண்டரிகள்) இறுதி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இறுதியாக டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 17.5 ஓவர்களில் 142 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.