பெண்கள் பிரிமீயர் லீக் கிரிக்கெட்: மந்தனா ரூ.3.4 கோடிக்கு ஏலம் - கார்ட்னெர், சிவெர், தீப்தி ஷர்மாவுக்கும் 'ஜாக்பாட்'
|பிரிமீயர் லீக் கிரிக்கெட் போட்டிக்கான வீராங்கனைகள் ஏலத்தில் அதிகபட்சமாக இந்திய வீராங்கனை மந்தனா ரூ.3.4 கோடிக்கு விலை போனார்.
மும்பை,
பெண்கள் ஐ.பி.எல். எனப்படும் முதலாவது பெண்கள் பிரிமீயர் லீக் (டபிள்யூ.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் (மார்ச்) 4-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை மும்பையில் நடக்கிறது. இதில் மும்பை இந்தியன்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், உ.பி. வாரியர்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் ஆகிய 5 அணிகள் களம் இறங்குகின்றன.
இந்த அணிகளுக்கு வீராங்கனைகளை தேர்வு செய்வதற்கான ஏலம் மும்பையில் பாந்த்ரா-குர்லா காம்ப்ளக்சில் உள்ள ஜியோ சர்வதேச கூட்டரங்கில் நேற்று பிற்பகல் நடந்தது. 5 அணிகளைச் சேர்ந்த உரிமையாளர்கள், நிர்வாகிகள் ஏலத்தில் பங்கேற்றனர். ஒவ்வொரு அணிக்கும் தலா ரூ.12 கோடி செலவிட அனுமதிக்கப்பட்டது.
ஏலப்பட்டியலில் 179 வெளிநாட்டவர் உள்பட மொத்தம் 449 வீராங்கனைகள் இடம் பிடித்தனர். அவர்களுக்கு ரூ.10 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை அடிப்படை விலையாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. மும்பையைச் சேர்ந்த மல்லிகா சாகர் ஏலத்தை நடத்தினார்.
மந்தனாவுக்கு ரூ.3.4 கோடி
மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் முதல் வீராங்கனையாக இந்திய அணியின் துணை கேப்டன் ஸ்மிர்தி மந்தனாவின் பெயர் வாசிக்கப்பட்டது. அவரது தொடக்க விலை ரூ.50 லட்சமாகும். அவரை தங்கள் அணிக்கு இழுக்க மும்பை, பெங்களூரு இடையே கடும் போட்டி நிலவியது. இதனால் அவரது மதிப்பு கோடியை தாண்டியது. இறுதியில் ரூ.3.4 கோடிக்கு மந்தனாவை பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி வாங்கியது. இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் முதல்நபராக ஏலம் விடப்பட்ட மந்தனா தான் கடைசி வரை அதிக தொகைக்கு விலை போனவராக வலம் வந்தார்.
இந்திய அணியின் கேப்டனும், ஆல்-ரவுண்டருமான ஹர்மன்பிரீத் கவுரின் விலை ரூ.50 லட்சத்தில் இருந்து ஆரம்பித்தது. அவரை வசப்படுத்த பெங்களூரு, டெல்லி, மும்பை, உ.பி. அணிகள் ஆர்வம் காட்டின. ஆனாலும் மந்தனா அளவுக்கு தொகை எகிறவில்லை. ரூ.1.8 கோடிக்கு மும்பை கேட்ட போது, மற்ற நிர்வாகிகள் அத்துடன் அமைதி காத்தனர். இதனால் அந்த தொகைக்கு அவரை மும்பை அணி சொந்தமாக்கியது.
கார்ட்னெர்-சிவெர்
வெளிநாட்டு வீராங்கனைகளில் இருவர் ரூ.3 கோடியை தாண்டி விலை போனார்கள். 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட்டுகளை அள்ளிய ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டர் ஆஷ்லி கார்ட்னெரை ரூ.3.2 கோடிக்கு குஜராத் ஜெயன்ட்ஸ் அணி எடுத்தது. இவரை உ.பி. வாரியர்சும் வாங்க முனைப்பு காட்டியது. ஆனால் ரூ.3 கோடி வந்ததும் உ.பி. பின்வாங்கி விட்டது.
இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் நதாலி சிவெருக்கும் கடும் கிராக்கி காணப்பட்டது. ரூ.50 லட்சத்தில் இருந்து தொடங்கிய சிவெரை தங்கள் அணியில் சேர்க்க மும்பையும், உ.பி.யும் மல்லுக்கட்டின. கடைசியில் அவரை ரூ.3.2 கோடிக்கு மும்பை அணி தட்டிச் சென்றது.
மேலும் சில இந்திய முன்னணி வீராங்கனைகளுக்கும் மெகா ஜாக்பாட் அடித்தது. 20 ஓவர் உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் அரைசதம் விளாசி நாயகியாக ஜொலித்த ஜெமிமா ரோட்ரிக்சை ரூ.2.2 கோடிக்கும், ஜூனியர் உலகக் கோப்பையை இந்தியாவுக்கு வென்றுத்தந்த 'இளம் புயல்' ஷபாலி வர்மாவை ரூ.2 கோடிக்கும் டெல்லி அணி வாங்கியது.
தீப்தி ஷர்மாவுக்கு ரூ.2.6 கோடி
இதே போல் ஆல்-ரவுண்டர் தீப்தி ஷர்மா (ரூ.2.6 கோடி, உ.பி. வாரியர்ஸ்), வேகப்பந்து வீச்சாளர் பூஜா வஸ்ட்ராகர் (ரூ.1.9 கோடி, மும்பை), மிடில் வரிசை பேட்டர் யாஸ்திகா பாட்டியா (ரூ.1½ கோடி, மும்பை), இளம் விக்கெட் கீப்பர் ரிச்சா கோஷ் (ரூ.1.9 கோடி, பெங்களூரு), வேகப்பந்து வீச்சாளர் ரேணுகா சிங் (ரூ.1½ கோடி, பெங்களூரு), தேவிகா வைத்யா (ரூ.1.4 கோடி, உ.பி.வாரியர்ஸ்) ஆகிய இந்தியர்களும் கோடிகளில் நனைகிறார்கள்.
வெளிநாட்டு வீராங்கனைகளில் ஆஸ்திரேலியாவின் 'ரன் குவிக்கும் எந்திரம்' பெத் மூனி (ரூ.2 கோடி, குஜராத்), இங்கிலாந்தின் இடக்கை சுழற்பந்து வீச்சாளர் சோபி எக்லெஸ்டன் (ரூ.1.8 கோடி, உ.பி. வாரியர்ஸ்), ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டர் எலிஸ் பெர்ரி (ரூ.1.7 கோடி, பெங்களூரு), தாலியா மெக்ராத் (ரூ.1.4 கோடி, உ.பி. வாரியர்ஸ்), மெக் லானிங் (ரூ.1.1 கோடி, டெல்லி), தென்ஆப்பிரிக்க ஆல்-ரவுண்டர் மரிஜானே காப் (ரூ.1½ கோடி, டெல்லி) ஆகியோரின் விலையும் ஏலத்தில் கவனத்தை ஈர்த்தன.
87 வீராங்கனைகள் ரூ.59½ கோடிக்கு ஏலம்
பெண்கள் பிரிமீயர் லீக் கிரிக்கெட் ஏலத்தில் 30 வெளிநாட்டவர் உள்பட 87 வீராங்கனைகள் மொத்தம் ரூ.59½ கோடிக்கு விலை போனார்கள். அதே சமயம் நியூசிலாந்தின் சுசி பேட்ஸ், வெஸ்ட் இண்டீசின் ஸ்டெபானி டெய்லர், இலங்கை கேப்டன் சமாரி அட்டப்பட்டு, இங்கிலாந்தின் டேனி வியாட், தென்ஆப்பிரிக்காவின் லாரா வோல்வார்த், இந்தியாவின் பூனம் ரவுத், மேகனா சிங், எக்தா பிஸ்ட், திருஷ் காமினி, வேதா கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் விலை போகாதவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர்.
தமிழக வீராங்கனை ஹேமலதாவை குஜராத் அணி வாங்கியது
இந்த ஏலத்தில் இந்திய வீராங்கனையும், தமிழகத்தை சேர்ந்தவருமான ஹேமலதா தயாளனை ரூ.30 லட்சத்திற்கு குஜராத் ஜெயன்ட்ஸ் வாங்கியுள்ளது. சென்னையில் வசிக்கும் 28 வயதான ஹேமலதா பேட்டிங்குடன், சுழற்பந்தும் வீசக்கூடியவர். இந்திய அணிக்காக 9 ஒரு நாள் மற்றும் 15 இருபது ஓவர் போட்டிகளில் விளையாடியுள்ளார்.