< Back
கிரிக்கெட்
பெண்கள் பிரிமீயர் லீக் கிரிக்கெட்: பெங்களூரு-டெல்லி அணிகள் இன்று மோதல்
கிரிக்கெட்

பெண்கள் பிரிமீயர் லீக் கிரிக்கெட்: பெங்களூரு-டெல்லி அணிகள் இன்று மோதல்

தினத்தந்தி
|
5 March 2023 5:53 AM IST

பெண்கள் பிரிமீயர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெறும் லீக் ஆட்டங்களில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்-டெல்லி கேப்பிட்டல்ஸ், உ.பி.வாரியர்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதுகின்றன.

மும்பை,

முதலாவது பெண்கள் பிரிமீயர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மும்பையில் நேற்று தொடங்கியது. இதில் 2-வது நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரண்டு லீக் ஆட்டங்கள் நடக்கிறது. மும்பை பிரபோர்ன்ஸ் ஸ்டேடியத்தில் மாலை 3.30 மணிக்கு தொடங்கும் லீக் ஆட்டத்தில் ஸ்மிர்தி மந்தனா தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்-மெக் லானிங் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன.

பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் பேட்டிங்கில் ஸ்மிர்தி மந்தனா, ஹீதர் நைட், எரின் பர்ன்ஸ், ரிச்சா கோஷ்சும், பந்து வீச்சில் மேகன் ஸ்கட், ரேணுகா சிங்கும், ஆல்-ரவுண்டர்களில் எலிஸ் பெர்ரி, சோபி டெவின், டேன் வான் நீகெர்க்கும் வலுசேர்க்கிறார்கள்.

மெக் லானிங்

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் பேட்டிங்கில் மெக் லானிங், ஷபாலி வர்மா, அலிஸ் கேப்சி, ஜெமிமா ரோட்ரிக்ஸ், லாரா ஹாரிஸ், பவுலிங்கில் ஜெஸ் ஜோனசென், பூனம் யாதவ், ராதா யாதவ், ஷிகா பாண்டே, மரிஜானே காப் ஆகியோரும் சிறப்பாக செயல்படக்கூடியவர்கள்.

20 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு தலைமை தாங்கி 4 முறை கோப்பையை வென்றவரான மெக் லானிங் டெல்லி அணிக்கு கேப்டனாக உள்ளார். அனுபவம் வாய்ந்த அவரது வழிநடத்துதலில் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி அணியின் கையே ஓங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நவிமும்பையில் உள்ள டி.ஒய்.பட்டீல் ஸ்டேடியத்தில் இரவு நடைபெறும் மற்றொரு லீக் ஆட்டத்தில் அலிசா ஹீலி தலைமையிலான உ.பி.வாரியர்ஸ் அணி, பெத் மூனி தலைமையிலான குஜராத் ஜெயன்ட்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

இரவு 7.30 மணிக்கு...

உ.பி.வாரியர்ஸ் அணியில் கேப்டன் அலிசா ஹீலி, துணை கேப்டன் தீப்தி ஷர்மா, சோபி எக்லெஸ்டன், ஷப்னிம் இஸ்மாயில், தாலியா மெக்ராத், ராஜேஸ்வரி கெய்க்வாட், கிரேஸ் ஹாரி உள்ளிட்ட சிறந்த வீராங்கனைகளும், குஜராத் ஜெயன்ட்ஸ் அணியில் கேப்டன் பெத் மூனி, ஹர்லீங் தியோல், ஆஷ்லி கார்ட்னெர், சோபியா டங்லி, அனபெல் சதர்லேண்ட், சினே ராணா, ஹேமலதா உள்ளிட்ட முன்னணி வீராங்கனைகளும் அங்கம் வகிக்கின்றனர்.

இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்போர்ட்ஸ் 18, கலர்ஸ் தமிழ் ஆகிய சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

மேலும் செய்திகள்