பெண்கள் பிரீமியர் லீக்; குஜராத் ஜெயன்ட்ஸ் அணியின் கேப்டனாக ஆஸ்திரேலிய வீராங்கனை நியமனம்
|இந்த ஆண்டுக்கான டபிள்யூ.பி.எல். கிரிக்கெட் தொடர், வரும் 23ம் தேதி தொடங்க உள்ளது.
மும்பை,
பெண்கள் ஐ.பி.எல். எனப்படும் பெண்கள் பிரீமியர் லீக் (டபிள்யூ.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இதில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், உ.பி. வாரியர்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் ஆகிய 5 அணிகள் பங்கேற்றன. முதலாவது டபிள்யூ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி சாம்பியன் கோப்பையை வென்றது.
இந்நிலையில் இந்த ஆண்டுக்கான டபிள்யூ.பி.எல். கிரிக்கெட் தொடர் வரும் 23ம் தேதி தொடங்க உள்ளது. இந்த முறை தொடர் பெங்களூரு மற்றும் டெல்லியில் நடைபெற உள்ளது. வரும் 23ம் தேதி தொடங்கும் முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோத உள்ளன.
இந்நிலையில் இந்த தொடரில் கலந்து கொள்ள உள்ள குஜராத் ஜெயன்ட்ஸ் அணியின் கேப்டனாக ஆஸ்திரேலிய வீராங்கனை பெத் மூனி நியமிக்கப்பட்டுள்ளதாக அந்த அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. முதல் சீசனிலும் குஜராத் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
ஆனால் முதல் ஆட்டத்தில் காயமடைந்ததால் அவர் அதன் பின்னர் தொடரில் கலந்து கொள்ளவில்லை அவருக்கு பதிலாக சினே ராணா அணியை வழிநடத்தினார். இந்நிலையில் இந்த சீசனில் குஜராத் அணியின் கேப்டனாக பெத் மூனியும், துணை கேப்டனாக சினே ராணாவும் செயல்படுவார்கள் என அந்த அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.