< Back
கிரிக்கெட்
மகளிர் ஒருநாள் கிரிக்கெட்: வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 108 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!!

image courtesy;twitter/@BCCIWomen

கிரிக்கெட்

மகளிர் ஒருநாள் கிரிக்கெட்: வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 108 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!!

தினத்தந்தி
|
19 July 2023 5:44 PM IST

வங்கதேசத்துக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 108 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

டாக்கா,

வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி அங்கு 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் பங்கேற்று ஆடி வருகிறது. இதில் முதலாவதாக நடைபெற்ற டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது.

இதையடுத்து நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணிக்கு அதிர்ச்சி அளித்து வங்கதேசம் வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வங்கதேசம் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஸ்மிருதி மந்தனா மற்றும் பிரியா புனியா ஆகியோர் களம் இறங்கினர். இதில் பிரியா புனியா 7 ரன்னிலும், ஸ்மிருதி மந்தனா 36 ரன்னிலும் அடுத்து களம் இறங்கிய யாஷ்டிகா பாதியா 15 ரன்னிலும் அவுட் ஆகினர்.

இதையடுத்து கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர், ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஆகியோர் களம் இறங்கி அணியை சரிவில் இருந்து மீட்டனர். இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதில் ஹர்மன்ப்ரீத் கவுர் 52 ரன்னும், ரோட்ரிக்ஸ் 86 ரன்னும் எடுத்து அவுட் ஆகினர். இறுதியில் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 228 ரன்கள் எடுத்தது. வங்கதேசம் அணி தரப்பில் நகிதா அக்தர், சுல்தானா காதுன் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து 229 ரன்கள் எடுத்தால் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றலாம் என்ற நிலையில் வங்கதேச அணி களம் இறங்கியது. வங்கதேச அணி வீராங்கனைகள் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். வங்கதேச அணியில் பர்கானா ஹோக் மட்டுமே இந்திய அணியின் பந்து வீச்சை சமாளித்து ஆடினார். மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்து வெளியேறினர்.

வெறும் 35.1 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த வங்கதேச அணி 120 ரன்களில் சுருண்டது. இதனால் இந்திய அணி 108 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 3 போட்டிகள் தொடரை 1-1 என்று சமநிலைக்கு கொண்டு வந்துள்ளது. வங்கதேச அணி தரப்பில் அதிகபட்சமாக பர்கானா ஹோக் 47 ரன்கள் அடித்தார். இந்திய அணி தரப்பில் ஜெமிமா ரோட்ரிக்ஸ் 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அணி வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார் . ஆல்ரவுண்டராக ஜொலித்த அவரே ஆட்டநாயகியாகவும் தேர்வு செய்யப்பட்டார். இவ்விரு அணிகளுக்கு இடையிலான தொடர் யாருக்கு என்பதை தீர்மானிக்கும் 3-வது மற்றும் கடைசி போட்டி வரும் 22ஆம் தேதி நடைபெற உள்ளது.

மேலும் செய்திகள்