< Back
கிரிக்கெட்
பெண்கள் ஒருநாள் கிரிக்கெட்: இந்திய அணியை முதல்முறையாக வீழ்த்தியது வங்காளதேசம்
கிரிக்கெட்

பெண்கள் ஒருநாள் கிரிக்கெட்: இந்திய அணியை முதல்முறையாக வீழ்த்தியது வங்காளதேசம்

தினத்தந்தி
|
16 July 2023 8:03 PM GMT

பெண்கள் ஒரு நாள் கிரிக்கெட்டில் வங்காளதேசம் முதல்முறையாக இந்திய அணியை தோற்கடித்து வரலாறு படைத்தது.

மிர்புர்,

இந்திய பெண்கள் அணி தோல்வி

வங்காளதேசத்துக்கு சென்றுள்ள இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடுகிறது. இதன் முதலாவது ஆட்டம் மிர்புரில் நேற்று நடந்தது. இதில் முதலில் வங்காளதேசம் பேட்டிங் செய்த போது மழை குறுக்கிட்டதால் 44 ஓவர்களாக குறைக்கப்பட்டது. தொடர்ந்து ஆடிய வங்காளதேசம் 43 ஓவர்களில் 152 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக கேப்டனும், விக்கெட் கீப்பருமான நிகர் சுல்தானா 39 ரன்கள் எடுத்தார். இந்திய தரப்பில் புதுமுக வேகப்பந்து வீச்சாளர் அமன்ஜோத் கவுர் 4 விக்கெட்டும், தேவிகா வைத்யா 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

அடுத்து டக்வொர்த்-லீவிஸ் விதிப்படி இந்தியாவுக்கு 44 ஓவர்களில் 154 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்திய வீராங்கனைகள் இந்த எளிய இலக்கைக் கூட நெருங்க முடியாமல் திணறினர். துணை கேப்டன் ஸ்மிர்தி மந்தனா (11 ரன்), யாஸ்திகா பாட்டியா (15 ரன்), கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் (5 ரன்), ஜெமிமா ேராட்ரிக்ஸ் (10 ரன்) ஏமாற்றம் அளித்தனர். ஆல்-ரவுண்டர் தீப்தி ஷர்மா எடுத்த 20 ரன்களே அணியின் அதிகபட்சமாக அமைந்தது. 35.5 ஓவர் மட்டுமே தாக்குப்பிடித்த இந்திய அணி 113 ரன்னில் சுருண்டது. இதன் மூலம் வங்காளதேசம் 40 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. வேகப்பந்து வீச்சாளர் மருபா அக்தர் 4 விக்கெட்டும், சுழற்பந்து வீச்சாளர் ரப்யா கான் 3 விக்கெட்டும் சாய்த்தனர். மருபா அக்தர் ஆட்டநாயகியாக தேர்வு செய்யப்பட்டார்.

பெண்கள் ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணியை வங்காளதேசம் வீழ்த்துவது இதுவே முதல் முறையாகும். இதற்கு முன்பு 5 முறை இந்தியாவிடம் தோற்று இருந்தது.

கேப்டன் கருத்து

பின்னர் இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் கூறுகையில், 'நாங்கள் குறைந்தது 20 ரன்கள் கூடுதலாக விட்டுக்கொடுத்து விட்டோம். எங்களது பலத்துக்கு ஏற்ப பந்து வீசவில்லை. அடிப்பதற்கு ஏதுவான நிறைய பந்துகளை வீசி விட்டோம். இதே போல் பேட்டிங்கில் யாரும் பொறுப்புடன் விளையாடவில்லை. லெக்ஸ்பின்னருக்கு எதிராக விளையாடுவதில் நாங்கள் பலவீனமானவர்கள் கிடையாது. ஆனால் அவர்கள் நன்றாக பந்து வீசினர். ஒன்று, இரண்டு ரன் வீதம் சீராக எடுப்பதில் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும்' என்றார்.

இவ்விரு அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி இதே மைதானத்தில் நாளை மறுதினம் நடக்கிறது.

மேலும் செய்திகள்