< Back
கிரிக்கெட்
பெண்கள் ஐ.பி.எல். கிரிக்கெட: ஆமதாபாத் அணியை ரூ.1,289 கோடிக்கு அதானி குழுமம் வாங்கியது
கிரிக்கெட்

பெண்கள் ஐ.பி.எல். கிரிக்கெட: ஆமதாபாத் அணியை ரூ.1,289 கோடிக்கு அதானி குழுமம் வாங்கியது

தினத்தந்தி
|
26 Jan 2023 4:26 AM IST

பெண்கள் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான அணிகள் மொத்தம் ரூ.4,670 கோடிக்கு விற்பனை ஆனது. அதிகபட்சமாக ஆமதாபாத் அணியை ரூ.1,289 கோடிக்கு அதானி குழுமம் வாங்கியது.

மும்பை,

ஆண்களுக்கான ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு தொடங்கி வெற்றிகரமாக வீறுநடை போட்டு வருகிறது. இதேபோல் பெண்களுக்கான ஐ.பி.எல். போட்டி நடத்த வேண்டும் என்று நீண்டநாட்களாக கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதனை ஏற்று இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் பெண்களுக்கான முதலாவது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மார்ச் மாதம் மும்பையில் நடத்தப்படுகிறது. இந்த போட்டிக்கு 'பெண்கள் பிரிமீயர் லீக்' என்று நேற்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்த போட்டியில் 5 அணிகள் பங்கேற்கும் என்றும் 10 நகரங்களை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்படும் அந்த அணிகளை வாங்க விருப்பம் உள்ள நிறுவனங்கள் மூடிய டெண்டர் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஐ.பி.எல். பெண்கள் அணிக்கான விண்ணப்பத்தை ரூ.5 லட்சம் செலுத்தி 30-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் வாங்கின. இதில் 17 நிறுவனங்கள் டெண்டர் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்பித்து இருந்தன. இதில் 7 ஐ.பி.எல். அணி நிர்வாகங்களும் அடங்கும்.

பெண்கள் ஐ.பி.எல். (பெண்கள் பிரிமீயர் லீக்) 5 அணிகளுக்கான டெண்டர்கள் மும்பையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் பிரிக்கப்பட்டு இறுதி செய்யப்பட்டன. இதில் அதிக தொகையை குறிப்பிட்டு விதிமுறைக்கு உட்பட்டு விண்ணப்பித்து இருந்த நிறுவனங்களுக்கு அவர்கள் கேட்ட அணிகள் ஒதுக்கப்பட்டன.

இதன்படி அதிகபட்சமாக ஆமதாபாத் அணியை ரூ.1,289 கோடிக்கு அதானி குழுமம் தங்கள் வசப்படுத்தியது. கடந்த ஆண்டு புதிதாக சேர்க்கப்பட்ட ஐ.பி.எல். ஆண்கள் அணியை வாங்க முயற்சித்து அதானி குழுமம் தோல்வியை தழுவியது நினைவிருக்கலாம். மும்பை அணியை ரூ.912.99 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் வாங்கியது. இதேபோல் பெங்களூரு அணியை (ரூ.901 கோடி) பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி நிர்வாகமும், டெல்லி அணியை (ரூ.810 கோடி) டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி நிர்வாகமும் சொந்தமாக்கின.

லக்னோ அணியை ரூ.757 கோடிக்கு கேப்ரி குளோபல் நிறுவனம் தங்கள் வசமாக்கியது. 5 அணிகள் மொத்தம் ரூ,4,669.99 கோடிக்கு விற்பனை ஆனது. இது இந்திய கிரிக்கெட் வாரியம் எதிர்பார்த்ததை (ரூ.4 ஆயிரம் கோடி) விட அதிக தொகையாகும்.

'தற்போது பெண்கள் பிரிமீயர் லீக் போட்டிக்கான அட்டவணை தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. வீராங்கனைகள் ஏலம் உள்ளிட்ட விஷயங்கள் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும்' என்று ஐ.பி.எல். சேர்மன் அருண் துமால் தெரிவித்துள்ளார்.

இது குறித்து இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் ஜெய் ஷா வெளியிட்ட டுவிட்டர் பதிவில், 'இன்று கிரிக்கெட்டில் வரலாற்று சிறப்புமிக்க நாளாகும். பெண்கள் பிரிமீயர் லீக் போட்டி அணிகளுக்கான உரிமத் தொகை முதலாவது ஐ.பி.எல். போட்டிக்கான அணிகளின் உரிமத் தொகை சாதனையை முறியடித்துள்ளது. இது பெண்கள் கிரிக்கெட்டில் மறுமலர்ச்சியின் தொடக்கத்தை குறிப்பதாகும். இந்த போட்டி பெண்கள் கிரிக்கெட்டுக்கு தேவையான சீர்திருத்தங்களை கொண்டுவருவதுடன், இதன் எல்லா பங்குதாரர்களுக்கும் பலனை உறுதி செய்யும்' என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த போட்டிக்கான ஒளிபரப்பு உரிமத்தை முதல் 5 ஆண்டுகளுக்கு ரூ.951 கோடிக்கு வியாகாம் 18 நிறுவனம் ஏற்கனவே பெற்றுள்ளது.

மேலும் செய்திகள்