மகளிர் கிரிக்கெட்: அயர்லாந்தை வீழ்த்தி ஆறுதல் வெற்றி பெற்ற இலங்கை
|அயர்லாந்துக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் இலங்கை வெற்றி பெற்றது.
பெல்பாஸ்ட்,
இலங்கை கிரிக்கெட் அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது.
அடுத்ததாக நடைபெற்ற ஒருநாள் தொடரை முதல் 2 போட்டிகளின் முடிவிலேயே அயர்லாந்து கைப்பற்றி அசத்தியது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற இலங்கை பந்து வீசுவதாக அறிவித்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி, இலங்கையின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 122 ரன்களில் சுருண்டது. அந்த அணியில் அதிகபட்சமாக அர்லின் கெல்லி 35 ரன்கள் அடித்தார். இலங்கை தரப்பில் அதிகபட்சமாக சமாரி அத்தபத்து மற்றும் அச்சினி குலசூர்யா தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இதனையடுத்து 123 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 123 ரன்கள் அடித்து அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றி ஏற்கனவே தொடரை இழந்து விட்ட இலங்கைக்கு ஆறுதலாக அமைந்தது.