மகளிர் ஆசிய கோப்பை: பரபரப்பான ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இலங்கை
|மகளிர் ஆசிய கோப்பை தொடரின் 2-வது அரையிறுதி ஆட்டத்தில் இலங்கை - பாகிஸ்தான் அணிகள் மோதின.
தம்புல்லா,
இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள 9-வது மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 2-வது அரையிறுதி ஆட்டத்தில் இலங்கை - பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இலங்கை பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 140 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் ஆன முனீபா அலி 37 ரன்கள் அடித்தார். இலங்கை தரப்பில் அதிகபட்சமாக பிரபோதானி 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதனையடுத்து 141 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணிக்கு பாகிஸ்தான் பந்து வீச்சாளர் சாடியா இக்பால் கடும் நெருக்கடி அளித்தார். சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை வீழ்த்திய அவர், இலங்கை அணியை அழுத்தத்திற்கு உள்ளாக்கினார். ஒருபுறம் விக்கெட் சரிந்தாலும் மறுமுனையில் இலங்கை அணியின் கேப்டன் சமாரி அத்தபத்து தனி ஆளாக போராடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார்.
அவர் ஆட்டமிழந்த பின் இலங்கை அணி வெற்றி பெற கடைசி 6 பந்துகளில் 3 ரன்கள் தேவைப்பட்டது. கடைசி ஓவரை வீசிய நிடா தர் முதல் 3 பந்துகளில் ரன் எதுவும் விட்டு கொடுக்காமல் 1 விக்கெட்டை வீழ்த்த ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. இருப்பினும் அடுத்த 2 பந்துகளில் 3 ரன்கள் அடித்து இலங்கை வெற்றி பெற்றது.
19.5 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 141 ரன்கள் அடித்த இலங்கை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. இலங்கை அணி தரப்பில் அதிகபட்சமாக சமாரி அத்தபத்து 63 ரன்கள் அடித்தார். பாகிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக சாடியா இக்பால் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
நாளை நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் இந்தியா - இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.