மகளிர் ஆசிய கோப்பை: முதல் வீராங்கனையாக வரலாற்று சாதனை படைத்த சமாரி அத்தபத்து
|மகளிர் ஆசிய கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இலங்கை - மலேசியா அணிகள் மோதின.
தம்புல்லா,
மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற ஒரு லீக் ஆட்டத்தில் இலங்கை - மலேசியா அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை 20 ஓவர்களில் 4 விக்கெட்டை இழந்து 184 ரன்கள் குவித்தது.
இலங்கை தரப்பில் அதிகபட்சமாக கேப்டன் சமாரி அத்தபத்து சதம் அடித்து (119 ரன்) அசத்தினார். இதையடுத்து களம் இறங்கிய மலேசியா 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 40 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.
இதன் மூலம் 144 ரன் வித்தியாசத்தில் இலங்கை அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த ஆட்டத்தில் சதம் அடித்ததன் மூலம் மகளிர் ஆசிய கோப்பை வரலாற்றில் சமாரி அத்தபத்து புதிய வரலாற்று சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
அதாவது, மகளிர் ஆசிய கோப்பை வரலாற்றில் சதம் அடித்த முதல் வீராங்கனை என்ற சாதனையை சமாரி அத்தபத்து படைத்துள்ளார்.