< Back
கிரிக்கெட்
கிரிக்கெட் வீரர்களுக்கு இணையாக வீராங்கனைகளுக்கு ஊதியம் - பி.சி.சி.ஐ. அறிவிப்புக்கு மிதாலி ராஜ் வரவேற்பு

Image Courtesy : PTI

கிரிக்கெட்

கிரிக்கெட் வீரர்களுக்கு இணையாக வீராங்கனைகளுக்கு ஊதியம் - பி.சி.சி.ஐ. அறிவிப்புக்கு மிதாலி ராஜ் வரவேற்பு

தினத்தந்தி
|
28 Oct 2022 2:38 AM IST

வரலாற்று சிறப்புமிக்க இந்த முயற்சி பெண்கள் கிரிக்கெட்டுக்கு புதிய விடியல் என்று முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ் கூறியுள்ளார்.

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் மத்திய ஒப்பந்தத்தில் இடம் பிடிக்கும் வீரர்கள் 4 பிரிவாகவும், வீராங்கனைகள் 3 பிரிவாகவும் பிரிக்கப்பட்டு ஆண்டு ஒப்பந்த தொகை வழங்கப்படுகிறது. களத்தில் சிறப்பான செயல்பாட்டுக்கு ஏற்ப வீரர்களுக்கு ரூ.7 கோடி, ரூ.5 கோடி, ரூ.3 கோடி, ரூ.1 கோடி என்றும், வீராங்கனைகளுக்கு ரூ.50 லட்சம், ரூ.30 லட்சம், ரூ.10 லட்சம் என்றும் ஒப்பந்த ஊதியம் அளிக்கப்படுகிறது.

இது தவிர ஒவ்வொரு போட்டிக்கும் வீரர், வீராங்கனைகளுக்கு போட்டி கட்டணம் என்ற பெயரில் தனியாக ஊதியம் வழங்கப்படுகிறது. இந்த ஊதிய தொகையும் வீராங்கனைகளை விட வீரர்களுக்கு அதிகமாகும்.

இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர், வீராங்கனைகளுக்கு போட்டி கட்டணத்தை சமமாக வழங்க இந்திய கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை எடுத்து இருக்கிறது. இந்திய கிரிக்கெட் வாரிய உயர்மட்ட கமிட்டி கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது.

இதன்படி இனிமேல் இந்திய கிரிக்கெட் வீரர்களை போல் வீராங்கனைகளும் ஒரு டெஸ்ட் போட்டிக்கு ரூ.15 லட்சமும், ஒரு ஒருநாள் போட்டிக்கு ரூ.6 லட்சமும், ஒரு 20 ஓவர் போட்டிக்கு ரூ.3 லட்சமும் போட்டி கட்டணமாக பெறுவார்கள். முன்பு இந்திய வீராங்கனைகளுக்கு ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டி ஒன்றுக்கு ரூ.1 லட்சமும், டெஸ்ட் போட்டிக்கு ரூ.2½ லட்சமும் கட்டணமாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் ஜெய்ஷா தனது டுவிட்டர் பதிவில், "இனிமேல் கிரிக்கெட் வீரர், வீராங்கனைகளுக்கான சமமான ஊதியம் (போட்டி கட்டணம்) வழங்கப்படும். இது கிரிக்கெட்டில் பாலின சமத்துவத்துக்கான புதிய அத்தியாயத்தை உருவாக்கும் முயற்சியாகும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து இந்திய முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ் கூறுகையில், "வரலாற்று சிறப்புமிக்க இந்த முயற்சி பெண்கள் கிரிக்கெட்டுக்கு புதிய விடியலாகும். இதற்காக இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் ஜெய்ஷாவுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார். இந்திய பெண்கள் அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், மந்தனா, முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் உள்பட பலரும் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் முடிவை பாராட்டியுள்ளனர்.

மேலும் செய்திகள்