அவர் இல்லாததால் இலங்கை அணி இந்தியாவை வீழ்த்தி விட்டது - ஹர்பஜன் சிங் கருத்து
|ஒலிம்பிக் போட்டிகளை பார்த்ததால் இந்தியா - இலங்கை ஒருநாள் தொடரை பார்க்கவில்லை என ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
இலங்கைக்கு எதிராக கடந்த வாரம் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் தொடரை 27 வருடங்கள் கழித்து இந்தியா இழந்தது. 3 போட்டிகள் கொண்ட அந்த தொடரில் முதல் போட்டி சமனில் முடிந்திருந்த நிலையில் 2 மற்றும் 3-வது போட்டிகளில் இலங்கை வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி வரலாறு படைத்தது.
இந்நிலையில் ஒலிம்பிக் போட்டிகளை பார்த்ததால் இந்தியா - இலங்கை ஒருநாள் தொடரை பார்க்கவில்லை என முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். மேலும் ஜஸ்பிரித் பும்ரா, பாண்ட்யா போன்ற சில முக்கிய வீரர்கள் இல்லாத இந்திய அணியை இலங்கை தோற்கடித்ததாக அவர் கூறியுள்ளார். அதே சமயம் விராட் கோலி, ரோகித் சர்மா இருந்த இந்திய அணியை தோற்கடித்ததற்காக இலங்கையை பாராட்டும் அவர் இதெல்லாம் சகஜம் என்று ரசிகர்களுக்கு ஆறுதல் கூறியுள்ளார்.
இது குறித்து சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு:-"உண்மையில் இந்தியா - இலங்கை மோதிய தொடரில் ஒரு பந்தை கூட நான் பார்க்கவில்லை. ஏனெனில் நான் ஒலிம்பிக் போட்டிகளை மட்டுமே பார்த்தேன். ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும்போது அதிலிருந்து உங்களுடைய கண்களை எடுக்க முடியாது. சில நேரங்களில் நீங்கள் வெல்வீர்கள் சில நேரங்களில் தோற்ப்பீர்கள். அதுதான் விளையாட்டாகும். அனைத்து கிரிக்கெட்டர்களும் இந்த சூழ்நிலைகளை கடந்தே வருவார்கள். நீங்கள் நன்றாக விளையாடினாலும் சில நேரங்களில் வெல்ல முடியாது.
இதற்காக நீங்கள் இலங்கைக்கு பாராட்டு கொடுக்க வேண்டும். அவர்கள் இந்தியாவை விட நன்றாக விளையாடினர். இந்திய அணி செய்யாத ஏதோ ஒன்றை அவர்கள் நன்றாக செய்துள்ளனர். அதனாலேயே அவர்கள் அரிதாக இந்தியாவுக்கு எதிராக தொடரை வென்றுள்ளனர். ஆனால் அந்த தொடரில் பும்ரா போன்றவர்கள் இல்லாததால் இந்தியாவின் பவுலிங் உச்சமாக இல்லை. இருப்பினும் விராட், ரோகித், ராகுல் இருந்ததால் பேட்டிங் நன்றாகவே இருந்தது. அதனால் இது இலங்கை கிரிக்கெட்டில் நல்ல சாதனையாகும். இந்திய அணி வெற்றிப் பாதைக்கு திரும்பும் என்று நம்புகிறேன்" என கூறினார்.