< Back
கிரிக்கெட்
2007-ஐ விட 2024 டி20 உலகக்கோப்பையை வென்றது மிகவும் சிறப்பானது - ரோகித் சர்மா

Image Courtesy: AFP

கிரிக்கெட்

2007-ஐ விட 2024 டி20 உலகக்கோப்பையை வென்றது மிகவும் சிறப்பானது - ரோகித் சர்மா

தினத்தந்தி
|
5 July 2024 5:18 PM IST

டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டத்தை வென்றது.

மும்பை,

அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டத்தை வென்றது. இதையடுத்து சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஐ.சி.சி. டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றி கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக வீரர்கள் மும்பையில் திறந்த பஸ்சில் ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டனர்.

பிரமாண்டமான பேரணி முடிந்ததும் இந்திய வீரர்களுக்கு மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் பாராட்டு விழா நடந்தது. இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் ரோஜர் பின்னி, செயலாளர் ஜெய் ஷா ஆகியோர் உலகக்கோப்பையை வென்றதற்காக ரூ.125 கோடியை ஊக்கத்தொகையாக வழங்கினர்.

இந்நிலையில் ஒரு வீரராக 2007 டி20 உலகக்கோப்பையை வென்றதை விட இந்தியாவின் கேப்டனாக வென்ற 2024 டி20 உலகக் கோப்பையே தமக்கு மிகவும் ஸ்பெஷலானது என ரோகித் சர்மா கூறியுள்ளார். இது பற்றி பேருந்தில் பயணித்த போது அவர் கூறியதாவது,

2007 வித்தியாசமான உணர்வு. அந்த பயணத்தை நாங்கள் மதிய நேரத்தில் துவங்கினோம். இந்த பயணத்தை மாலை நேரத்தில் துவங்கினோம். 2007 வெற்றியை மறக்க முடியாது. ஏனெனில் அது என்னுடைய முதல் உலகக் கோப்பை.

ஆனால் இது கொஞ்சம் அதிகம் ஸ்பெஷல். ஏனெனில் இம்முறை நான் நமது அணியை பெருமையுடன் வழி நடத்தினேன். இந்த வெற்றி எங்களுக்கு மட்டுமல்ல மொத்த நாட்டுக்கும் எவ்வளவு பெரிது என்பதை ரசிகர்கள் காண்பிக்கின்றனர். எனவே ரசிகர்களுக்காகவும் இதை சாதித்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்