"டாஸ் வெற்றி, தோல்வி ஆட்டத்தில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது" - ரோகித் சர்மா
|இரு அணிகளும் வெற்றி அடைய வரிந்து கட்டி நிற்பதால் களத்தில் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மும்பை,
10 அணிகள் பங்கேற்ற 13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடித்த இந்தியா, தென்ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறின.
இந்த நிலையில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்று (புதன்கிழமை) அரங்கேறும் முதலாவது அரைஇறுதியில் முன்னாள் சாம்பியனான இந்திய அணி, நியூசிலாந்துடன் மோதுகிறது. பிற்பகல் 2 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. இரு அணிகளும் வெற்றி அடைய வரிந்து கட்டி நிற்பதால் களத்தில் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், அரைஇறுதி போட்டி குறித்து இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில், "நியூசிலாந்து அணியின் பலம் மற்றும் பலவீனத்தை நன்கு அறிந்திருப்பதால் வான்கடே மைதானத்தில், டாஸ் வெற்றி, தோல்வி ஆட்டத்தில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. கடந்த உலக கோப்பை அரையிறுதியில் நிகழ்ந்தது நினைவில் இருந்தாலும், அதைப் பற்றி பெரிதாக யாரும் பேசிக்கொள்ளவில்லை. எப்படி சிறப்பாக விளையாடுவது, எப்படி ஆட்டத்தை மெருகேற்றுவது என்பதில்தான் எங்கள் கவனம் உள்ளது" என்று கூறினார்.