வெற்றியோ தோல்வியோ.. இந்தியாவுக்கு எதிராக எங்களது இலக்கு இதுதான் - வங்காளதேச கேப்டன்
|இந்தியா - வங்காளதேசம் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வரும் 19-ம் தேதி தொடங்க உள்ளது.
சென்னை,
வங்காளதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர்களில் விளையாட உள்ளது. இதில் முதலில் இரு அணிகளுக்கு இடையே டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வரும் 19-ம் தேதி தொடங்க உள்ளது.
இந்த டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ தலைமையிலான வங்கதேச அணி நேற்று சென்னை வந்தடைந்தனர்.
இந்த தொடர் குறித்து நஜ்முல் ஷாண்டோ கூறுகையில், "நிச்சயம் இந்த தொடர் எங்களுக்கு மிக சவாலான ஒரு தொடராக இருக்கப்போகிறது. பாகிஸ்தான் அணிக்கு எதிராக நாங்கள் டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ளதால் கூடுதல் நம்பிக்கையை பெற்றுள்ளோம். ஒட்டுமொத்த தேசமும் இப்போது எங்கள் அணி மீது நம்பிக்கை வைத்திருக்கிறது என்று நினைக்கிறேன். இந்த டெஸ்ட் தொடரில் நிச்சயம் நாங்கள் எங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சிப்போம். இந்திய அணி எங்களை விட தரவரிசையில் முன்னிலையில் இருக்கிறார்கள்.
ஆனாலும் நாங்கள் அவர்களுக்கு எதிராக சிறப்பாக விளையாட வேண்டியது அவசியம். இந்த தொடரில் வெற்றி தோல்வி என்பதைவிட ஐந்து நாட்களும் சிறப்பாக விளையாட வேண்டும் என்பதே எங்களது இலக்கு. இந்த தொடரில் எங்களது மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிக்கொண்டு வந்து இந்திய அணிக்கு கடும் சவாலை அளிப்போம். எங்களது அணியில் தற்போது இடம் பெற்றிருக்கும் வீரர்கள் அனைவரும் மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி உள்ளார்கள்" என்று கூறினார்.