பாக். எதிரான வெற்றி...நாங்கள் விளையாடிய விதம் உண்மையிலேயே மகிழ்ச்சி அளிக்கிறது - ஹஸ்மத்துல்லா ஷாகிதி
|உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைப்பெற்ற ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றது.
சென்னை,
50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் அணிகள் சென்னையில் மோதின. இந்த ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் வரலாற்று வெற்றியை பதிவு செய்தது.
இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் 50 ஓவர்கள் முடிவில் 282 ரன்கள் குவித்தது. இதையடுத்து 283 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ஆப்கானிஸ்தான் 49 ஓவர்களில் 286 ரன் எடுத்து வெற்றி பெற்றது.
இந்நிலையில் இந்த வெற்றிக்கு பின்னர் ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் ஹஸ்மத்துல்லா ஷாகிதி கூறியதாவது,
இந்த வெற்றியை பெற்றதில் உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருக்கிறது. நாங்கள் ஒரு தரமான அணியாக இந்த போட்டியில் வெற்றி பெற்றுள்ளோம். இனிவரும் போட்டிகளிலும் இதே போன்ற செயல்பாட்டை வெளிப்படுத்த காத்திருக்கிறோம்.
இன்றைய போட்டியில் நாங்கள் விளையாடிய விதம் உண்மையிலேயே மகிழ்ச்சி அளிக்கிறது. ஏற்கனவே இங்கிலாந்து அணியை வீழ்த்திய நாங்கள் தற்போது பாகிஸ்தான் அணியையும் வீழ்த்தியுள்ளதில் மகிழ்ச்சி.
எங்கள் அணி ஆசியக் கோப்பை தொடரிலிருந்தே மிகச் சிறப்பாக விளையாடி வருகிறது. இதே வெற்றியை இனிவரும் போட்டிகளிலும் பெற விரும்புகிறோம். எங்களால் முடிந்த அளவு பாசிட்டிவாக விளையாடி எங்கள் அணிக்கும், எங்கள் நாட்டிற்கும் பெருமையை தேடித் தர விரும்புகிறோம். இந்த போட்டியில் ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை நாங்கள் மிகச் சிறப்பாக விளையாடியதாக நினைக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.