டி20 உலகக்கோப்பை: அரையிறுதி போட்டியில் அஷ்வினுக்கு பதிலாக சாஹல் களமிறங்க வாய்ப்பு?
|இந்த உலகக் கோப்பை தொடரில் தற்போது வரை சாஹல் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை.
அடிலெய்டு,
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. லீக் சுற்றில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி புள்ளிப் பட்டியலில் முதலிடத்தை பிடித்து அரை இறுதிக்குள் நுழைந்தது.
இதையடுத்து இந்திய அணி அடிலெய்டில் வரும் நவம்பர் 10ம் தேதியன்று அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியை எதிர்கொள்ளவுள்ளது. இந்திய அணியில் இந்த போட்டிக்கான பிளேயிங் 11 குறித்து தீவிர ஆலோசனை நடைபெற்று வருகிறது.
ஆஸ்திரேலிய மைதானங்கள் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமானது என்பதால் இந்திய அணி தற்போது வரை ஒரு சுழற்பந்துவீச்சாளருடன் விளையாடி வருகிறது. அந்த வகையில் தமிழக வீரர் அஸ்வின் விளையாடி வருகிறார்.
அதே நேரத்தில் டி20 உலகக்கோப்பை தொடரின் தொடக்கத்தில் இருந்தே யுஸ்வேந்திர சாஹலுக்கு விளையாட வாய்ப்பு வழங்க வேண்டும் என கிரிக்கெட் வல்லுநர்கள் கோரி வருகின்றனர். ஆனால் தற்போது வரை இந்த தொடரில் சாஹல் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை.
அஸ்வின் பந்துவீச்சில் மட்டும் இன்றி வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பேட்டிங்கிலும் ஜொலித்து வருகிறார். இதனால் அணி நிர்வாகம் தொடர்ந்து அஷ்வினை களமிறக்கி வருகிறது.
இந்நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் பிட்ச்சின் ஸ்பின் தன்மையை பொறுத்து இந்திய அணியின் ஆடும் லெவனில் மாற்றம் ஏற்படலாம் என இந்திய அணியின் பயிற்சியாளர் டிராவிட் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசுகையில், "அரையிறுதி போட்டியில் அடிலெய்டில் முற்றிலும் புதிய ஸ்ட்ரிப்பில் நாங்கள் விளையாடலாம் . வங்காளதேசத்துக்கு எதிராக நாங்கள் விளையாடிய மைதான ஸ்ட்ரிப்பில், ஸ்பின் இல்லை. ஆனால் அங்கு கடைசியாக நடந்த பாக் - வங்காளதேச போட்டியை பார்த்தேன். அதில் சுழற்பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தினர். எனவே நாங்கள் மீண்டும் பிட்ச்-ஐ சென்று பார்த்தால் தான் அதற்கு ஏற்ற வகையில் அணியை தேர்வு செய்ய முடியும்" எனக்கூறியுள்ளார்.
ஸ்பின் குறித்து டிராவிட் குறிப்பிட்டு பேசியுள்ளது இந்திய அணியில் அஸ்வினுக்கு பதிலாக சாஹலை களமிறக்குவதற்கு வாய்ப்பு இருப்பதற்கான சந்தேகத்தை எழுப்பியுள்ளதாக கிரிக்கெட் விமர்சகர்கள் கருதுகின்றனர்.