அடுத்த 10 ஆண்டுகளுக்கு இவரைப் போல் பேட் செய்ய விரும்புவார்கள் - ஹாரி புரூக்கைப் புகழ்ந்த மைக்கேல் வாகன்....!
|இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி வெலிங்டனில் நேற்று தொடங்கியது.
லண்டன்,
இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி வெலிங்டனில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. அந்த அணி 21 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்து திணறியது.
இதனையடுத்து ஜோ ரூட் மற்றும் ஹாரி புரூக் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஜோ ரூட் நிதானமாக ஆடி சதம் அடித்தார். மறுமுனையில் இருந்த ஹாரி புரூக் அதிரடியாக விளையாடி சதம் அடித்தார். இதனால் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்புக்கு 315 எடுத்துள்ளது. ஹாரி புரூக் 184 ரன்களுடனும், ஜோ ரூட் 101 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
6-வது டெஸ்ட்டில் விளையாடும் ஹாரி புரூக்கிற்கு இது 4-வது சதம் ஆகும். 24 வயதாகும் அவர் தொடர்ந்து மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இதுவரை 6 டெஸ்ட் போட்டிகளில் 807 ரன்களை குவித்துள்ளார். புரூக்கின் மிரட்டல் ஆட்டத்தை பார்த்து வியந்த இங்கிலாந்தின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் வெகுவாக பாராட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-
கடந்த 10 ஆண்டுகளில் ஜோ ரூட் போல பேட்டிங் செய்ய வேண்டும் என்று அனைத்து குழந்தைகளும் விரும்பினர். தற்போது அடுத்த 10 ஆண்டுகளில் அதே குழந்தைகள் ஹாரி புரூக்கை போல விளையாட வேண்டும் என்று ஆசைப்படுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.