2027 உலகக் கோப்பையில் விராட், ரோகித் விளையாடுவார்களா? - கம்பீர் அளித்த பதில்
|2027ம் ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற உள்ளது.
மும்பை,
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. சாம்பியன் பட்டம் வென்றதும் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி, ரோகித் சர்மா, ரவீந்திர ஜடேஜா ஆகிய சீனியர் வீரர்கள் அறிவித்தனர்.
அதே சமயம் ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடுவோம் என்றும் அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து 2025 சாம்பியன்ஸ் டிராபி மற்றும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் (இந்தியா தகுதி பெற்றால்) விராட் மற்றும் ரோகித் கண்டிப்பாக விளையாடுவார்கள் என பி.சி.சி.ஐ. செயலாளர் ஜெய் ஷா அறிவித்தார்.
ஆனால் 2027ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடைபெற உள்ள ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் விராட் மற்றும் ரோகித் விளையாடுவது கடினமாகும். இந்நிலையில் 2027 உலகக் கோப்பையில் விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோர் பிட்டாக இருக்கும் பட்சத்தில் விளையாடுவார்கள் என பயிற்சியாளர் கவுதம் கம்பீர் அறிவித்துள்ளார்.
மும்பையில் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கவுதம் கம்பீர் கூறியதாவது, 50 ஓவர் மற்றும் 20 ஓவர் உலகக் கோப்பை போன்ற பெரிய தொடர்களில் தங்களால் என்ன செய்ய முடியும் என்பதை அவர்கள் காண்பித்துள்ளார்கள். அவர்கள் இருவரிடமும் இன்னும் நிறைய கிரிக்கெட் உள்ளது. சாம்பியன்ஸ் டிராபி விரைவில் வருகிறது. ஆஸ்திரேலியாவில் பெரிய டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது. அதில் விளையாடுவதற்கு அவர்கள் உத்வேகத்துடன் இருப்பார்கள்.
ஒருவேளை பிட்னஸை தொடர்ந்து கடைபிடிக்கும் பட்சத்தில் 2027 உலகக் கோப்பையிலும் அவர்களால் விளையாட முடியும். அது அவர்களுடைய சொந்த முடிவு. எவ்வளவு காலம் அவர்களால் விளையாட முடியும் என்பதை என்னால் சொல்ல முடியாது. இருப்பினும் விராட் மற்றும் ரோகித் ஆகியோர் உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் அவர்களிடம் இன்னும் ஆட்டம் இருக்கிறது.
ரோகித் மற்றும் விராட் ஆகியோர் டி20 போட்டிகளில் விளையாட மாட்டார்கள். இருப்பினும் அவர்கள் இந்தியாவுக்காக மற்ற முக்கியமான போட்டிகளில் விளையாடுவார்கள். நல்ல பார்மில் இருந்தால் அனைத்து போட்டிகளிலும் கூட அவர்கள் விளையாடுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.