ஆப்கானிஸ்தானுக்கு பதிலடி கொடுக்குமா இலங்கை? - சூப்பர்4 சுற்று இன்று தொடக்கம்
|ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் சூப்பர்4 சுற்றில் ஆப்கானிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் உத்வேகத்துடன் இன்று அந்த அணியை இலங்கை எதிர்கொள்கிறது.
சார்ஜா,
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்றுடன் லீக் சுற்று நிறைவடைந்தது. இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடித்த இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இலங்கை ஆகிய அணிகள் சூப்பர்4 சுற்றுக்கு முன்னேறியுள்ளன. சூப்பர்4 சுற்றுக்கு வந்துள்ள 4 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்குள் நுழையும். இந்த நிலையில் சூப்பர்4 சுற்று இன்று (சனிக்கிழமை) தொடங்குகிறது. இதன் முதல் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான்-இலங்கை அணிகள் சார்ஜாவில் மோதுகின்றன.
முகமது நபி தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி, லீக் சுற்றில் இலங்கை மற்றும் வங்காளதேசத்தை புரட்டியெடுத்தது. முஜீப் ரகுமான், ரஷித்கான் சுழல் ஜாலத்தால் மிரட்டினர்.
இலங்கையை வெறும் 105 ரன்னில் அடக்கி அந்த இலக்கை 10.1 ஓவர்களிலேயே எட்டிப்பிடித்த ஆப்கானிஸ்தான் மீண்டும் ஆதிக்கம் செலுத்தும் முனைப்புடன் தயாராகி வருகிறது.
தசுன் ஷனகா தலைமையிலான இலங்கை அணி முதல் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானிடம் தோற்றாலும் அடுத்த ஆட்டத்தில் வங்காளதேசத்தை தோற்கடித்து சூப்பர்4 சுற்றுக்குள் கால்பதித்தது.
இப்போது இலங்கை அணி, முந்தைய தோல்விக்கு பழிதீர்க்கும் வேட்கையுடன் காத்திருக்கிறது. தீக்ஷனா, ஹசரங்கா ஆகியோரின் சுழற்பந்து வீச்சு முதல் இரு ஆட்டத்தில் மெச்சும்படி இல்லை. இன்றைய ஆட்டத்தில் இவர்கள் தாக்கத்தை ஏற்படுத்துவார்களா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். 2-வது பேட்டிங் செய்யும் அணிக்கு ஆடுகளம் அனுகூலமாக இருப்பதால் 'டாஸ்' முக்கிய பங்கு வகிக்கும்.
இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.