சி.எஸ்.கே-வுக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் களம் இறங்குவாரா ஷிகர் தவான்..? - பயிற்சியாளர் தகவல்
|பெங்களூரு அணிக்கு எதிராக வியாழக்கிழமை நடைபெறும் போட்டியில் இருந்து தவான் விளையாட வாய்ப்புள்ளது.
தர்மசாலா,
நடப்பு ஐ.பி.எல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக ஷிகர் தவான் செயல்பட்டு வந்தார். முதல் ஐந்து போட்டிகளில் விளையாடிய அவர் தொடரில் 152 ரன்கள் எடுத்த நிலையில், தோள்பட்டை காயம் காரணமாக அதன்பின் விளையாடாமல் உள்ளார்.
அவர் அணிக்கு எப்போது திரும்புவார் என்பதை பாஞ்சாப் அணி நிர்வாகம் உறுதியாக தெரிவிக்கவில்லை. கடந்த ஐந்து போட்டிகளில் அவர் விளையாடவில்லை. இதையடுத்து சாம் கர்ரன் பொறுப்பு கேப்டனாக செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில் பஞ்சாப் அணி இன்று தரம்சாலாவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து விளையாடுகிறது.
இந்நிலையில், இந்த போட்டியை முன்னிட்டு பஞ்சாப் அணியின் சுழற்பந்து வீச்சு பயிற்சியாளர் சுனில் ஜோஷி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம், இந்த போட்டியிலாவது ஷிகர் தவான் களம் இறங்குவாரா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்து அவர் கூறியதாவது,
ஷிகர் தவான் இந்த போட்டியில் விளையாடமாட்டார். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக வியாழக்கிழமை நடைபெறும் போட்டியில் இருந்து தொடர்ந்து விளையாட வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார். பஞ்சாப் அணி இதுவரை 10 போட்டிகளில் 4 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 8வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.