லோகேஷ் ராகுலை நீக்கமாட்டோம் - பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர்
|லோகேஷ் ராகுலை நீக்கமாட்டோம் என்று இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் தெரிவித்துள்ளார்.
பெர்த்,
20 ஓவர் உலக கோப்பை போட்டி தொடரில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் லோகேஷ் ராகுல் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 8 பந்துகளில் 4 ரன்னும், நெதர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 12 பந்துகளில் 9 ரன்னும் எடுத்து ஆட்டம் இழந்தார். இதனால் அவர் ஆடும் லெவன் அணியில் இருந்து நீக்கப்பட்டு ரிஷப் பண்ட் சேர்க்கப்படுவாரா? என்று இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோரிடம் நேற்று கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு அவர் பதிலளித்து கூறியதாவது:-
லோகேஷ் ராகுலை நீக்கமாட்டோம். அது குறித்து நாங்கள் சிந்திக்கவில்லை. இரண்டு ஆட்டங்களில் மோசமாக ஆடியதற்காக ஒருவரை நீக்குவது சரியானதாக இருக்காது. லோகேஷ் ராகுல் நன்றாக பேட்டிங் செய்கிறார். பயிற்சியின் போதும் நன்றாக செயல்பட்டார். இதனால் நாங்கள் எந்த மாற்றமும் செய்யமாட்டோம். துரதிருஷ்டவசமாக 11 பேர் மட்டுமே விளையாட முடியும். ரிஷப் பண்ட் அருமையான வீரர் என்பது எனக்கு தெரியும்.
எந்தவொரு அணிக்கு எதிராகவும் அவரால் அதிரடியாக விளையாட முடியும் என்பது எங்களுக்கு தெரியும். உங்களுக்கு வாய்ப்பு எப்பொழுது வேண்டுமானாலும் வரலாம். அதற்கு தயாராக இருங்கள் என்று ரிஷப் பண்டுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் மனதளவிலும், உடலளவிலும் தயாராக இருக்க வேண்டும். அவர் தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்டு வருவதை நீங்கள் பார்த்திருக்கலாம். எப்போது வாய்ப்பு வந்தாலும் அவர் தயாராக இருப்பார் என்று நம்புகிறேன்.
பவர்பிளேயில் லோகேஷ் ராகுல் நிதானமாக விளையாடுவதாக கேட்கிறீர்கள். ஒவ்வொரு வீரருக்கும் ஒரு விதமான ஆட்ட அணுகுமுறை இருக்கும். அதற்கு தகுந்தமாதிரி அவர்களது இன்னிங்சை வடிவமைப்பார்கள். லோகேஷ் ராகுல் நல்ல பார்மில் இருந்தால் அவரும் ஆக்ரோஷமாக ஆடுவார். சூழலுக்கு தகுந்தபடி எங்கள் அணி விளையாடுகிறது. சூழலுக்கு தகுந்தபடி விராட்கோலி தனது ஆட்டத்தை மாற்றும் திறன் படைத்தவர்.
அதனை அவர் அருமையாக செய்துள்ளார். அதனை அவர் தொடர்ந்து செய்வார் என்று நம்புகிறோம். ரன் குவிக்க வேண்டும் என்பது தான் எங்களது நோக்கமாகும். ஆனாலும் சூழலுக்கு தகுந்தபடி ஆடுவது அவசியமானதாகும். இங்குள்ள ஆடுகளங்கள் 200 ரன்களுக்கு மேல் குவிக்கக்கூடியவை என்று நான் நினைக்கவில்லை. எனவே நாங்கள் அதற்கு தகுந்தபடி நடக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.