ராஜஸ்தான் அணியின் வெற்றிப் பயணம் தொடருமா...? - பெங்களூருவுடன் இன்று மோதல்
|ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்றிரவு நடைபெறும் லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.
ஜெய்ப்பூர்,
17-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று (சனிக்கிழமை) ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் நடைபெறும் 19-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை எதிர்கொள்கிறது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தனது முதலாவது ஆட்டத்தில் 20 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்சையும், அடுத்த ஆட்டங்களில் 12 ரன் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்சையும், 6 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்சையும் வீழ்த்தி 'ஹாட்ரிக்' வெற்றியோடு வீறுநடை போடுகிறது. முந்தைய ஆட்டத்தில் 125 ரன்னில் மும்பையை கட்டுப்படுத்திய ராஜஸ்தான் அந்த இலக்கை 15.3 ஓவர்களில் எட்டிப்பிடித்து அசத்தியது.
ராஜஸ்தான் அணியில் பேட்டிங்கில் ரியான் பராக், கேப்டன் சஞ்சு சாம்சன் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். ஆனால் அதிரடி தொடக்க ஆட்டக்காரர்களான யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர் ஆகியோர் முதல் 3 ஆட்டங்களையும் சேர்த்து 40 ரன்னை கூட எட்டவில்லை. அவர்கள் நிலைத்து நின்றால் அந்த அணியின் பேட்டிங் மேலும் வலுப்பெறும். பந்து வீச்சில் டிரென்ட் பவுல்ட், யுஸ்வேந்திர சாஹல், நன்ரே பர்கர், அவேஷ் கான் ஆகியோர் மிரட்டுகிறார்கள். சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினிடம் இருந்து எதிர்பார்த்த பந்து வீச்சு வெளிப்படவில்லை.
பாப் டு பிளிஸ்சிஸ் தலைமையிலான பெங்களூரு அணி தடுமாற்றத்தை சந்தித்து வருகிறது. தொடக்க ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்சிடம் பணிந்த பெங்களூரு அணி அடுத்த ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்சை பதம் பார்த்தது. அதன் பிறகு 7 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்சிடமும், 28 ரன் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்சிடமும் தோல்வியை தழுவியது.
பெங்களூரு அணியில் பேட்டிங்கில் விராட்கோலி (203 ரன்கள்) தவிர தொடக்க வரிசை பேட்ஸ்மேன்களான கேப்டன் பாப் டு பிளிஸ்சிஸ், மேக்ஸ்வெல், கேமரூன் கிரீன், ரஜத் படிதார் ஆகியோரின் பேட்டிங் மெச்சும்படியாக இல்லை. கடைசி கட்டத்தில் மஹிபால் லோம்ரோர், தினேஷ் கார்த்திக் அதிரடி காட்டுகிறார்கள். பந்து வீச்சில் இடக்கை வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள், சுழற்பந்து வீசும் ஆல்-ரவுண்டர் மேக்ஸ்வெல் ஓரளவு நன்றாக செயல்பட்டு வருகின்றனர். முகமது சிராஜ், ரீஸ் டாப்லே ஆகியோர் துல்லியமாக பந்து வீச வேண்டியது அவசியமானதாகும்.
தனது வெற்றிப்பயணத்தை நீட்டிக்க ராஜஸ்தான் அணி முழு பலத்தையும் வெளிப்படுத்தும். அதேநேரத்தில் சரிவில் இருந்து எழுச்சிப்பெற்று வெற்றிப்பாதைக்கு திரும்ப பெங்களூரு அணி தீவிரம் காட்டும். எனவே இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. உள்ளூரில் ஆடுவது ராஜஸ்தான் அணிக்கு அனுகூலமாக இருக்கும். இவ்விரு அணிகளும் இதுவரை 29 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் பெங்களூரு அணி 15 முறையும், ராஜஸ்தான் அணி 12 முறையும் வென்று இருக்கின்றன. 2 ஆட்டங்கள் முடிவு இல்லாமல் போனது. இந்திய நேரப்படி ஆட்டம் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.