இன்றைய ஆட்டத்தில் முஸ்தாபிசுர், பதிரனா விளையாடுவார்களா..? - சி.எஸ்.கே பவுலிங் கோச் அளித்த பதில்
|ஐ.பி.எல் தொடரில் இன்று நடைபெறும் 22வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோத உள்ளன.
சென்னை.
ஐ.பி.எல் தொடரில் இன்று நடைபெறும் 22வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோத உள்ளன. இந்த ஆட்டம் சென்னையில் நடைபெறுகிறது. சென்னை அணி இதுவரை 4 ஆட்டங்களில் ஆடி 2 வெற்றி, 2 தோல்வி கண்டு புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது. அதேவேளையில் கொல்கத்தா 3 ஆட்டங்களில் ஆடி அனைத்திலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது.
இந்த நிலையில் இப்போட்டியில் சென்னை அணியின் வேகப்பந்து வீச்சாளர்களான முஸ்தாபிசுர் ரஹ்மான் மற்றும் பதிரனா ஆகியோர் விளையாடுவார்களா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. குறிப்பாக முதல் போட்டியிலேயே ஆட்டநாயகன் விருது வென்ற ரஹ்மான் விசா பெறுவதற்காக திடீரென நாடு திரும்பியதால் கடந்த போட்டியில் விளையாடவில்லை. அதே போல டெல்லிக்கு எதிரான கடந்த போட்டியில் பதிரனா லேசான காயத்தை சந்தித்ததால் விளையாடவில்லை.
இந்நிலையில் ரஹ்மான் மற்றும் பதிரனா இன்றைய ஆட்டத்தில் விளையாடுவார்களா என்ற கேள்விக்கு சி.எஸ்.கே பவுலிங் கோச் எரிக் சிமன்ஸ் பதில் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, ரஹ்மான் பற்றி இன்னும் எங்களுக்கு உறுதியாக தெரியவில்லை. பாஸ்போர்ட்டுக்காக அவர் வங்காளதேசத்துக்கு சென்ற காரணத்தால் அது எங்கள் கையில் இல்லை.
எனவே என்ன நடக்கிறது என்பதை பார்ப்போம். ஆனால் எந்த நிலைமையாக இருந்தாலும் அதை சமாளிக்க ஒரு அணியாக நாங்கள் தயாராகவே இருக்கிறோம். பதிரனாவை பொறுத்த வரை இந்த தொடரில் நாங்கள் எச்சரிக்கையுடன் இருக்க விரும்புகிறோம். இது மிகப்பெரிய தொடர். அவர் இந்த போட்டியில் விளையாடுவாரா என்பதை உடற்பயிற்சியாளர்கள் தான் தீர்மானிக்க வேண்டும்.
ஐ.பி.எல் நீண்ட தொடர் என்பதே எங்களுடைய ஒரே கவலையாகும். எனவே அவரது விஷயத்தில் கண்டிப்பாக நாங்கள் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை. இதன் அடிப்படையிலேயே உங்களுடைய முடிவு இருக்கும். இருப்பினும் அவர் விரைவாக குணமடைந்து வருகிறார். இவ்வாறு அவர் கூறினார்.