டி20 உலகக் கோப்பையில் மிட்செல் மார்ஷ் பந்து வீசுவாரா...? - ஆஸ்திரேலியா பயிற்சியாளர் தகவல்
|ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் மிட்செல் மார்ஷ். ஐ.பி.எல் கிரிக்கெட்டில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் இடம் பிடித்திருந்தார்.
மெல்போர்ன்,
ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் மிட்செல் மார்ஷ். ஐ.பி.எல் கிரிக்கெட்டில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் இடம் பிடித்திருந்தார். காலில் ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த மாதம் 2-வது வாரத்தில் ஆஸ்திரேலியா திரும்பினார். அவர் டி20 உலகக் கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
உலகக் கோப்பை தொடர் தொடங்குவதற்குள் காயத்தில் இருந்து மீண்டு விடுவாரா..? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்டு கூறுகையில்,
காயத்தில் இருந்து மீள்வதற்கான செயல்பாடு சிறப்பாக இருந்து வருகிறது. நாங்கள் எதிர்பார்த்ததை விட கொஞ்சம் மெதுவாக இருக்கிறது. ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் இருந்து அவர் விலகியுள்ளார். இதனால் டி20 உலகக்கோப்பை வரை அதிக நாட்கள் உள்ளது. முதல் போட்டி தொடங்குவதற்கு இன்னும் ஒருமாத காலம் உள்ளது.
அவர் தயாராவதற்கு போதுமான நேரம் உள்ளது. இன்னும் ஒன்றிரண்டு வாரங்கள் அவரால் பந்து வீச முடியாது. அதன்பின் அவர் பந்து வீச வாய்ப்புள்ளது. தொடரின் போது அவருடைய முழு பந்து வீச்சையும் பெறுவார். இவ்வாறு அவர் கூறினார்.