< Back
கிரிக்கெட்
ஜூனியர் உலகக் கோப்பையை வெல்லுமா இந்தியா? ஆஸ்திரேலியாவுடன் இன்று பலப்பரீட்சை
கிரிக்கெட்

ஜூனியர் உலகக் கோப்பையை வெல்லுமா இந்தியா? ஆஸ்திரேலியாவுடன் இன்று பலப்பரீட்சை

தினத்தந்தி
|
11 Feb 2024 5:39 AM IST

ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.

பெனோனி,

15-வது ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) தென்ஆப்பிரிக்காவில் கடந்த மாதம் 19-ந் தேதி தொடங்கியது. 16 அணிகள் பங்கேற்ற இந்த போட்டி இறுதி கட்டத்தை எட்டிவிட்டது.

இதில் மகுடம் யாருக்கு? என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி பெனோனியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இந்த இறுதி யுத்தத்தில் நடப்பு சாம்பியன் இந்திய அணி, முன்னாள் சாம்பியனான ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.

உதய் சாஹரன் தலைமையிலான இந்திய அணி லீக் ஆட்டங்களில் வங்காளதேசம், அயர்லாந்து, அமெரிக்காவையும், சூப்பர் சிக்ஸ் சுற்றில் நியூசிலாந்து, நேபாளத்தையும், அரைஇறுதியில் 2 விக்கெட் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்காவையும் தோற்கடித்து 9-வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. 5 முறை சாம்பியனான (2000, 2008,2012,2018, 2022) இந்திய அணி 2016-ம் ஆண்டில் இருந்து தொடர்ச்சியாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

தோல்வியை சந்திக்காமல்...

ஹியூக் வெப்ஜென் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி லீக் சுற்றில் நமிபியா, ஜிம்பாப்வே, இலங்கையையும், சூப்பர் சிக்ஸ் சுற்றில் இங்கிலாந்தையும், அரைஇறுதியில் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானையும் வீழ்த்தி 6-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைத்துள்ளது. இந்தியாவை போல் தோல்வியை சந்திக்காமல் முன்னேறி இருக்கும் ஆஸ்திரேலிய அணி சூப்பர் சிக்ஸ் சுற்றில் வெஸ்ட்இண்டீசுடன் மோதிய ஆட்டம் மட்டும் மழையால் முடிவு இல்லாமல் போனது.

இந்திய அணியில் பேட்டிங்கில் உதய் சாஹரன் (ஒரு சதம் , 3 அரைதம் உள்பட 389 ரன்கள்), முஷீர் கான் (2 சதம், ஒரு அரைசதம் உள்பட 338 ரன்கள்), சச்சின் தாஸ் (ஒரு சதம், ஒரு அரைசதம் உள்பட 294 ரன்கள்) அசத்தி வருவதுடன் ரன் குவிப்பில் முறையே முதல் 3 இடங்களில் இருக்கின்றனர். ஆதர்ஷ் சிங் (191 ரன்கள்), அர்ஷின் குல்கர்னி (186 ரன்) ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர். பந்து வீச்சில் சுழற்பந்து வீச்சாளர் சவுமி பாண்டே (17 விக்கெட்), வேகப்பந்து வீச்சாளர்கள் நமன் திவாரி (10 விக்கெட்), ராஜ் லிம்பானி, ஆல்-ரவுண்டர் முஷீர் கான் ஆகியோர் வலு சேர்க்கிறார்கள்.

ஆஸ்திரேலிய அணியை பொறுத்தமட்டில் பேட்டிங்கில் ஹாரி டிக்சன் (267 ரன்கள்), கேப்டன் ஹியூக் வெப்ஜென் (256 ரன்கள்), சாம் கோன்ஸ்டாஸ், ரையான் ஹிக்சும், பந்து வீச்சில் டாம் ஸ்டிராகர் (12 விக்கெட்), கலும் விட்லெர் (12 விக்கெட்), மாலி பியர்ட்மேன், ராப் மேக்மிலனும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள்.

ஆதிக்கம் தொடருமா?

கடந்த ஆண்டு நடந்த சீனியர்களுக்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் 50 ஓவர் உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி, ஆஸ்திரேலியாவிடம் வீழ்ந்து கோப்பையை வெல்லும் வாய்ப்பை கோட்டை விட்டது. அதற்கு பழிதீர்க்கும் வகையில் இந்திய ஜூனியர் அணி, ஆஸ்திரேலியாவை சாய்த்து 6-வது முறையாக உலகக் கோப்பையை வெல்லுமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.

அதேநேரத்தில் 3 முறை சாம்பியனான (1988, 2002, 2010) ஆஸ்திரேலிய அணி, இந்தியாவுக்கு அதிர்ச்சி அளித்து 4-வது முறையாக உலகக் கோப்பையை கைப்பற்ற வரிந்து கட்டும். எனவே இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

இந்திய அணி ஜூனியர் உலகக் கோப்பை வரலாற்றில் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை சந்திப்பது இது 3-வது முறையாகும். ஏற்கனவே மோதிய 2 முறையும் (2012, 2018-ம் ஆண்டு இறுதிப்போட்டி) இந்திய அணி வெற்றி வாகை சூடியிருப்பதால் இந்த முறையும் ஆதிக்கம் செலுத்தும் என்று ரசிகர்கள் ஆவல் கொண்டுள்ளனர்.

பழிவாங்க சிந்திக்கவில்லை

போட்டி குறித்து இந்திய அணியின் கேப்டன் உதய் சாஹரன் கருத்து தெரிவிக்கையில், 'நாங்கள் பழிவாங்குவதை பற்றி சிந்திக்கவில்லை. தற்போது எங்களது முழு கவனமும் இறுதிப்போட்டி குறித்து தான் இருக்கிறது. கடந்த காலத்தை பற்றி சிந்திக்கவோ, திரும்பி பார்க்கவோ விரும்பவில்லை. கோடிக்கணக்கான மக்களின் கனவுகளை தோளில் சுமந்தபடி உலகக் கோப்பை இறுதிப்போட்டியை அணுகுகிறோம். இந்த இறுதிப்போட்டியின் மூலம் அடுத்த தலைமுறைக்கு உத்வேகம் அளிக்கும் வரலாற்றை உருவாக்குவதே எங்கள் நோக்கமாகும். இது வெறும் விளையாட்டு மட்டுமல்ல. வரலாற்றில் நமது பெயரை பொறிக்க ஒரு வாய்ப்பாகும். இந்த போட்டி தொடரில் முதல் ஆட்டத்தில் இருந்தே ஆர்வமுடனும், உறுதியுடனும் விளையாடி வருகிறோம். அத்துடன் உலகக் கோப்பையை நாட்டுக்கு கொண்டு செல்ல முடியும் என்ற நம்பிக்கையுடனும் உள்ளோம். அதேபோல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதி ஆட்டத்திலும் சிறப்பாக செயல்பட்டு கோப்பையை கைப்பற்றி நாட்டுக்கு பெருமை சேர்க்க தயாராக இருக்கிறோம்' என்றார்.

ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஹியூக் வெப்ஜென் கூறுகையில், 'இறுதிப்போட்டியில் இந்தியாவை எதிர்கொள்ள காத்திருக்க முடியவில்லை. இந்த போட்டி தொடரில் எங்களது ஒட்டுமொத்த அணியும் அற்புதமாக செயல்பட்டு இருக்கிறது. ஒரு அணியாக கோப்பையை கையில் ஏந்துவது மிகவும் முக்கியமானதாகும். இந்த போட்டி தொடரில் இதுவரை இந்தியாவும் அபாரமாக செயல்பட்டுள்ளது. மேலும் இந்தியா ஒரு தரமான அணியாகும். அவர்கள் எங்களுக்கு சவால் அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம். அந்த சவாலை நாங்கள் எதிர்நோக்கி இருக்கிறோம்' என்றார்.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

இந்தியா:-ஆதர்ஷ் சிங், அர்ஷின் குல்கர்னி, முஷீர் கான், உதய் சாஹரன் (கேப்டன்), பிரியன்ஷூ மொலியா, சச்சின் தாஸ், அவானிஷ், முருகன் அபிஷேக், ராஜ் லிம்பானி, நமன் திவாரி, சவுமி பாண்டே.

ஆஸ்திரேலியா:- ஹாரி டிக்சன், சாம் கோன்ஸ்டாஸ், ஹியூக் வெப்ஜென் (கேப்டன்), ஹர்ஜஸ் சிங், ரையான் ஹிக்ஸ், ஆலிவர் பீக், டாம் கேம்ப்பெல், ராப் மேக்மிலன், டாம் ஸ்டிராகர், மாக்லி பியர்ட்மேன், கலும் விட்லெர்.

இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 மற்றும் தூர்தர்ஷன் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன. ஹாட்ஸ்டார் செயலியிலும் ஆட்டத்தை பார்க்கலாம்.

மேலும் செய்திகள்