டெஸ்ட் தொடரை சமன் செய்யுமா இந்தியா..? - 2வது போட்டியில் தென் ஆப்பிரிக்காவுடன் இன்று மோதல்...!
|2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என தென் ஆப்பிரிக்கா முன்னிலையில் உள்ளது.
கேப்டவுன்,
இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 32 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
இந்த தோல்வியின் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் இந்தியா பெரும் சரிவை சந்தித்தது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 2வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கேப்டவுனில் இன்று தொடங்குகிறது.
தொடரை சமன் செய்ய இந்த ஆட்டத்தில் கட்டாயம் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற நிலையில் இந்திய அணி ஆட உள்ளது. அதேவேளையில் போட்டியை டிரா செய்தாலே தொடரை கைப்பற்றலாம் என்ற நிலையில் தென் ஆப்பிரிக்கா உள்ளது.
ஆனால் இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்று தொடரை முழுமையாக கைப்பற்றும் முனைப்புடன் தென் ஆப்பிரிக்கா ஆடும் என்பதால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்திய நேரப்படி ஆட்டம் மதியம் 2 மணிக்கு தொடங்குகிறது.