< Back
கிரிக்கெட்
பிளே ஆப் சுற்று வாய்ப்பை வலுப்படுத்துமா சென்னை..? குஜராத் டைட்டன்சுடன் இன்று மோதல்
கிரிக்கெட்

பிளே ஆப் சுற்று வாய்ப்பை வலுப்படுத்துமா சென்னை..? குஜராத் டைட்டன்சுடன் இன்று மோதல்

தினத்தந்தி
|
10 May 2024 5:34 AM IST

ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற உள்ள லீக் ஆட்டத்தில் குஜராத் - சென்னை அணிகள் மோதுகின்றன.

அகமதாபாத்,

ரசிகர்களை மகிழ்வித்து வரும் 17-வது ஐ.பி.எல். தொடரில் இன்று (வெள்ளிக்கிழமை) அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறும் 59-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ், நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்சை சந்திக்கிறது.

குஜராத் அணி இதுவரை 11 ஆட்டங்களில் ஆடி 4 வெற்றி, 7 தோல்வியுடன் 8 புள்ளி பெற்று கடைசி இடத்தில் தத்தளிக்கிறது. குஜராத் அணி தனது எஞ்சிய 3 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்த சுற்று வாய்ப்பு குறித்து நினைத்து பார்க்க முடியும். எனவே இந்த ஆட்டம் அந்த அணிக்கு வாழ்வா-சாவா போன்றதாகும். இதில் தோல்வி அடைந்தால் அந்த அணி அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியாது.

சென்னை அணி 11 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி, 5 தோல்வி என்று 12 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் உள்ளது. அந்த அணி மீதமுள்ள தனது 3 ஆட்டங்களிலும் வெற்றியை ருசித்தால் எந்தவித பிரச்சினையும் இல்லாமல் அடுத்த சுற்றுக்குள் நுழைந்து விடலாம். 2-ல் வெற்றி பெற்றால் மற்ற அணிகளின் முடிவுக்காக காத்திருக்க வேண்டியது வரும்.

குஜராத்துக்கு எதிரான முந்தைய லீக் ஆட்டத்தில் சென்னை அணி 63 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அடுத்த சுற்று வாய்ப்பை வலுப்படுத்த சென்னை அணியும், முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுத்து அடுத்த சுற்று வாய்ப்பை தக்கவைக்க குஜராத் அணியும் வரிந்து கட்டும் என்பதால் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது. இந்த ஆட்டம் இரவு 7.30 மணியளவில் நடைபெற உள்ளது.

மேலும் செய்திகள்