< Back
கிரிக்கெட்
புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம் காணுமா சென்னை? பஞ்சாப் அணியுடன் இன்று மோதல்
கிரிக்கெட்

புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம் காணுமா சென்னை? பஞ்சாப் அணியுடன் இன்று மோதல்

தினத்தந்தி
|
5 May 2024 5:56 AM IST

ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெற உள்ளன.

தர்மசாலா,

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) 2 லீக் ஆட்டங்கள் அரங்கேறுகிறது. இதில் தர்மசாலாவில் உள்ள இமாசலபிரதேச கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் மாலை 3.30 மணிக்கு தொடங்கும் 53-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ்-சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மீண்டும் பலப்பரீட்சை நடத்துகின்றன. பஞ்சாப் அணியின் 2-வது உள்ளூர் மைதானமான தர்மசாலாவில் நடப்பு தொடரில் நடைபெறும் முதல் ஆட்டம் இதுவாகும்.

பஞ்சாப் கணிக்க முடியாத அணியாக விளங்குகிறது. அந்த அணி இதுவரை 10 ஆட்டங்களில் ஆடி 4 வெற்றி, 6 தோல்வியுடன் 8 புள்ளி பெற்றுள்ளது. முந்தைய 2 ஆட்டங்களில் கொல்கத்தா, சென்னை அணிகளை அதன் சொந்த மண்ணில் அடுத்தடுத்து முறையே 8 விக்கெட், 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வீழ்த்தியது. கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் 262 ரன் இலக்கை விரட்டிப்பிடித்து புதிய வரலாறு படைத்தது. அந்த அணி அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்க தனது எஞ்சிய 4 ஆட்டங்களிலும் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

நடப்பு சாம்பியன் சென்னை அணி இந்த சீசனில் சீரற்ற ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இதுவரை 10 ஆட்டங்களில் ஆடி 5 வெற்றி, 5 தோல்வி கண்டு 10 புள்ளி பெற்று இருக்கிறது. கடைசி 4 ஆட்டங்களில் 3-ல் தோல்வி கண்ட சென்னை அணி 3 நாட்களுக்கு முன்பு சொந்த மண்ணில் நடந்த ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப்பிடம் பணிந்தது.

பஞ்சாப் அணியிடம் முந்தைய ஆட்டத்தில் கண்ட தோல்விக்கு பதிலடி கொடுத்து வெற்றிப்பாதைக்கு திரும்ப சென்னை அணி தீவிரம் காட்டும். அதேநேரத்தில் மும்பை இந்தியன்சுக்கு அடுத்தபடியாக சென்னை அணிக்கு எதிராக தொடர்ந்து 5 ஆட்டங்களில் வெற்றி கண்டு வீறுநடை போடும் பஞ்சாப் அணி தனது ஆதிக்கத்தை தொடர்ந்து அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்க முழுபலத்தையும் வெளிப்படுத்தும். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.

இந்த போட்டியை தொடர்ந்து, இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோத உள்ளன.

மேலும் செய்திகள்